“என் காலரை பிடித்து இழுத்து தள்ளினார்” – இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மீது சேவாக் குற்றச்சாட்டு

0
1049
Shewag

சவுரவ் கங்குலியின் கேப்டன்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வீரர்களில் மிகவும் முக்கியமான வீரர் வலது கை துவக்க அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்!

அவருடைய காலத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளும் வந்திருந்தன. ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜெயசூர்யா இருவருக்கு பிறகு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் ஒரே மாதிரி ஆடிய பேட்ஸ்மேனாக சேவாக் இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அதைவிட தைரியமாகவே ஆடி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் முதல்முறையாக 300 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன். மேலும் உலக கிரிக்கெட்டில் இரண்டு முறை 300 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்று அதிரடியாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்த சாதனைகளைக் கொண்டிருக்கிறார்.

இதேபோல் சவுரவ் கங்குலியின் காலத்தில் மிக முக்கியமான இன்னொருவரும் வந்தார். அவர் இந்திய அணிக்கு 2000ஆம் ஆண்டு பயிற்சியாளராக வந்த நியூசிலாந்தை சேர்ந்த ஜான் ரைட். கங்குலி, ஜான் ரைட் கூட்டணியின் காலத்தில்தான் 2003 ஆம் ஆண்டு இந்திய அணி 20 ஆண்டுகள் கழித்து, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் ரைட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்த காலகட்டம் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் கொதிப்பான சூழ்நிலையைக் கொண்டிருந்தது. ஏனென்றால் அப்பொழுது இந்திய கிரிக்கெட்டில் சூதாட்ட புயல் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மிகவும் இக்கட்டான நேரத்தில் வந்து 2005 ஆம் ஆண்டு வரை மிகவும் சிறப்பாக பணியாற்றி சென்ற வெற்றிகரமான பயிற்சியாளர் ஆவார்.

- Advertisement -

தற்பொழுது இவரைப் பற்றித்தான் வீரேந்திர சேவாக் பரபரப்பான ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார் “2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் என்னைப் பிடித்து தள்ளினார். நான் அப்பொழுது மோசமான முறையில் ஆட்டம் இழந்ததற்காக அவர் என் சட்டை காலரை பிடித்து இழுத்து தள்ளினார்.

இதனால் அப்பொழுது நான் கடுமையாக கோபம் அடைந்து, அப்போதைய அணி மேலாளராக இருந்த ராஜீவ் சுக்லாவிடம் ‘எப்படி ஒரு பயிற்சியாளர் என்னை அடிக்க முடியும்?’ என்று புகார் செய்தேன். பிறகு ராஜீவ் சுக்லா மற்றும் முன்னாள் பிசிசிஐ பொதுமேலாளர் அம்ரித் மாத்தூர் இருவரும் என்னை ஜான் ரைட் இடம் சமாதானப்படுத்தி வைத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்!

இந்தப் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே ஒருமுறை பேசப்பட்ட பொழுது, பயிற்சியாளரிடம் எப்பொழுதும் கோபமான முறையில் நடந்து கொள்ளக் கூடாது என்று சச்சின் சேவாக்கை கண்டித்ததாக ஒரு தகவலும் இதற்கு பின்னால் இருப்பதும் குறிப்பிடத்தக்கது!