இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் சூரியகுமார் யாதவ் இந்திய t20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இந்திய கேப்டனாக வருவதற்கு எல்லா வாய்ப்புகளும் மீண்டும் இருப்பதாக ஹர்ஷா போக்லே கூறியிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் என இரண்டு பெரிய நிகழ்வுகளிலும் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார்.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் காரணமாக வெகு இயல்பாக இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியா வசம் வரும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
இப்படியான நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் உள்ளே வர, இந்திய கிரிக்கெட் வாரியம் வேறு விதமாக யோசிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி மற்றும் பணிச்சுமையை காரணம் காட்டி சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டார். அவருடைய இடத்திற்கு இளம் வீரர் சுப்மன் கில் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை. எனவே அவருக்கு இனி இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு வாய்ப்பு கிடைக்காது என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்.. 4 பேர் செம்மையா ரெடி ஆயிட்டாங்க – பாண்டிங் பேச்சுக்கு ஜெய் ஷா மறைமுக பதில்
இப்படியான நிலையில் இது குறித்து பேசி இருக்கும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “ஹர்திக் பாண்டியா தற்பொழுது எல்லா விதமான வெள்ளைப்பந்து போட்டிகளிலும் விளையாடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார். அவருக்கு இந்திய வெள்ளை பந்து அணிகளின் கேப்டன் பதவிக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கிறது. சூரியகுமார் யாதவ் தற்பொழுது புதிய கேப்டனாக சோதிக்கப்பட்டுதான் வருகிறார்.ஹர்திக் பாண்டியா தன்னுடைய உடல் தகுதியை பராமரித்து, எல்லா வெள்ளைப் பந்து தொடர்களிலும் விளையாடினால், மீண்டும் இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு அவர் கேப்டனாக வருவார்” என்று கூறியிருக்கிறார்.






