ஆஸி டெஸ்ட்.. 4 பேர் செம்மையா ரெடி ஆயிட்டாங்க – பாண்டிங் பேச்சுக்கு ஜெய் ஷா மறைமுக பதில்

0
317
Jay

இந்திய அணி இந்த ஆண்டில் அடுத்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரண்டு பெரிய அணிகள் மோதிக் கொள்வதால் இப்போது இருந்தே எதிர்பார்ப்புகள் இருபக்கமும் கூட்டப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கு இந்திய அணியின் தயாரிப்பு எப்படி இருக்கிறது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருக்கிறார்.

கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வந்திருக்கிறது. மேலும் உள்நாட்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறை ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று என கைப்பற்றும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக கருத்து கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பேசி இருந்த இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த ஒரு தசாப்தமாக பார்டர் கவாஸ்கர் ட்ராபிமேல் ஆஸ்திரேலியா அணி கை வைக்கவில்லை என்பதை மறந்து விடக்கூடாது எனவும், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் டெஸ்ட் தொடரை வெல்லும் எனவும் கூறியிருந்தார்.

- Advertisement -

தற்போது இந்த தொடர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இடம் கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது அதற்கு அவர் “நாங்கள் தற்போது பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கிறோம். மேலும் முகமது ஷமி நல்ல உடல் தகுதியுடன் கிடைப்பார் என்று நம்புகிறோம். எங்களுடையது அனுபவ அணியாக இருக்கும். உதாரணமாக எங்களுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த உடல் தகுதியுடன் இருப்பார்கள். நாங்கள் சிறந்த முறையில் அணியாக தயாராகி இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணி அடுத்து செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : நான் சந்தித்ததில் இவர்தான் கஷ்டமான பவுலர்.. அதுக்குதான் இந்த ஸ்பெஷல் பரிசா? – கவுதம் கம்பீர் தகவல்

இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் மிகவும் புத்திசாலித்தனமாக வீரர்களின் பணிச்சுமை மேலாண்மையில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே சில முக்கிய வீரர்களுக்கு சரியான இடைவெளிகள் ஓய்வுகள் கொடுக்கப்படுவதும், வீரர்களை காயப்படாமல் காப்பதும், மேலும் காயம் ஏற்பட்டால் மறுவாழ்வு சிறப்பான முறையில் ஏற்படுத்திக் கொடுப்பதும் என பல பக்கங்களில் வேலை செய்ய வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -