“இந்திய வீரரின் 30 வருட சாதனையை முறியடித்த ஹாரி ப்ரூக்ஸ் – இரண்டாவது டெஸ்டில் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி !

0
2456

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வெல்லிங்டன் நகரில் துவங்கியது. டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. காலையில் நிலவிய பந்து வீச்சிக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளை 21 ரன்களுக்குள் வீழ்த்தினர்.

- Advertisement -

அதன் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்தார் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி ப்ரூக்ஸ். ரூட் ஒருபுறம் நிதானமாக ஆட ஹாரி ப்ரூக்ஸ் தனது வழக்கமான அதிரடி பாணியில் ரண்களை குவிக்க ஆரம்பித்தனர் . இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் புருக்ஸ் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும் .

இங்கிலாந்து அணியின் பாஸ் பால் ஆட்டத்தினால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை . ஒவ்வொரு ஓவருக்கும் பௌண்டரிகளும் சிக்சர்களாக பறந்தன. மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஜோ ரூட் தனது 29 ஆவது சதத்தை நிறைவு செய்தார் . இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்க்கு 294 ரங்களை சேர்த்துள்ளனர்.

ஆட்டத்தின் 65 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 315 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது . ஹாரி ப்ரூக்ஸ் 169 பந்துகளில் 184 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார் . இதில் 24 பௌண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். மறுமுனையில் ஜோ ரூட் 101 ரன்கள் உடன் களத்தில் உள்ளார் . நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் கேப்டன் டிம் சவுதி 1 டிக்கெட்டையும் மேட் ஹென்றி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் .

- Advertisement -

இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் முப்பது வருட சாதனையை முறியடித்திருக்கிறார் ஹாரி ப்ரூக்ஸ் . இதற்கு முன் வினோத் காம்ப்ளி தனது முதல் 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 798 ரன்கள் எடுத்திருந்தார் . அதுவே உலக சாதனையாக இருந்தது. இந்தப் போட்டியில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் ஹாரி ப்ரூக்ஸ் . தற்போது ஒன்பது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆடி இருக்கும் ஹாரி ப்ரூக்ஸ் 807 ரண்களை குவித்து இருப்பதன் மூலம் வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.