மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு தொடர்ந்து எல்லா விஷயங்களும் எதிர்மறையாகவே நடந்து வருகிறது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டதால், சொந்த அணியின் ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மைதானத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
இதைவிட மிக முக்கியமாக அணியின் திட்டங்கள் மிக மோசமாக அமைந்திருக்கிறது. களத்தில் கேப்டன்ஷியில் ஹர்திக் பாண்டியாவும் சரிவர செயல்படவில்லை. இதெல்லாம் சேர்ந்து அந்த அணியை ஒட்டுமொத்தமாக முடக்கி வைத்திருக்கிறது. முதல் இரண்டு போட்டியில் வெளி மைதானத்தில் தோற்றவர்கள், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் தோற்றார்கள்.
இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் வெளியில் இருந்து வந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் வீரர் மனோஜ் திவாரி மீண்டும் ரோகித் சர்மாவை கேப்டனாக கொண்டு வர வேண்டும் எனக் கூறியிருக்கிறார். மும்பை இந்தியன் அணியின் ரசிகர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் இதே வழியில் வெற்றி பெறாமல் சென்று கொண்டே இருந்தால், கேப்டன் ஏதும் சிறப்பாக செய்யாமல் இருந்தால், நிச்சயம் ரசிகர்களிடம் மரியாதை பெற முடியாது என ஹர்திக் பாண்டியாவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி குறித்து ஏற்கனவே வெளிப்படையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
அடுத்து நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மிக முக்கிய வீரராக இந்திய அணியில் பார்க்கப்படுகிறார். நம்பிக்கையான ஒரே வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதால், இவர் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டின் சொத்தாக இருக்கிறார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மனரீதியாக நிறைய பின்னடைவுகளை சந்தித்து வருவது, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியும் பாதிக்கலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் அஞ்சுகிறார்கள்.
இதையும் படிங்க : ரோகித் பாய் கேப்டன்சி ரொம்ப நல்லா இருந்தது.. இங்க யாரையும் விட டீம்தான் முக்கியம் – ஆகாஷ் மத்வால் பேட்டி
நேற்றைய தோல்விக்கு பின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஹர்திக் பாண்டியா அதில் ” எங்களுடைய இந்த அணியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருந்தால், நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம், நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நாங்கள் தொடர்ந்து செல்வோம்” என்று கூறியிருக்கிறார். முடிந்த வரையில் அணியை நம்பிக்கையுடன் எடுத்துச் செல்வதற்கான முயற்சியில் தற்போது ஹர்திக் பாண்டியா ஈடுபட்டு வருகிறார்.