நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளராக ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டி லக்னோ ஏகனா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கால் முட்டியில் சிறிது அடிபட்ட காரணத்தினால் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
இன்றைய போட்டியில் லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிட்சல் மார்ஸ் 31 பந்தில் 60 ரன்கள், எய்டன் மார்க்ரம் 38 பந்தில் 53 ரன்கள் எடுத்து மிக வலிமையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நடுவில் அதிரடியாக விளையாடிய இந்திய இளம் வீரர் ஆயுஸ் பதோணி 19 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் கேப்டன் நடப்பு ஐபிஎல் தொடரில் 27 கோடி ரூபாய்க்கு அதிக விலையில் வாங்கப்பட்ட வருமான ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் ஏமாற்றினார். அவர் பந்துகளைச் சந்தித்து இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இந்தப் போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் பந்து வீசி 36 ரன்கள் விட்டுத் தந்து மொத்தம் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
மேலும் 18 வருட ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக இருந்து முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றியவராக ஹர்திக் பாண்டியா சிறப்பு சாதனை படைத்திருக்கிறார். மேலும் இந்த வரிசையில் கேப்டன்களில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையும் சேர்ந்திருக்கிறது.
இதையும் படிங்க : கம்மின்ஸ் ஆஸி மனநிலையில் தைரியமான கேப்டன்னு நினைத்தேன்.. ஆனா மொத்தமா ஏமாத்திட்டாரு – ஸ்ரீகாந்த் பேட்டி
ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய கேப்டன் பந்துவீச்சாளர் :
5/36 – ஹர்திக் பாண்டியா (2025)*
4/16 – அனில் கும்ப்ளே (2009)
4/16 – அனில் கும்ப்ளே (2010)
4/17-ஜேபி டுமினி (2015)
4/21 – ஷேன் வார்னே (2010)
4/29 – யுவராஜ் சிங் (2011)