வீடியோ.. 193 ரன்.. 43 பந்து.. 449 ஸ்ட்ரைக் ரேட்.. உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்

0
4581

ஐராப்பிய கிரிக்கெட் டி10 போட்டியில் கேடலுன்யா ஜாகுவார் அணியின் பேட்ஸ்மேன் ஹம்சா 43 பந்துகளில் 193 ரன்கள் குவித்து அபார சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் புத்தகத்தில் தற்போது ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் அதிரடி என்பது, மக்களுக்கு எப்போதுமே விருந்து அளிக்கும் வகையில் அமையும். அதன்படி தற்போதுள்ள நவீன கிரிக்கெட்டும் அப்படித்தான். அதனால்தான் t20 போட்டி மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

- Advertisement -

இது இன்னும் சற்று ஒருபடி மேல் போய் உலகெங்கும் டி10 லீக்குகள் நடந்தப்பட்டு வருகின்றன. இது மக்களுக்கு இன்னும் உற்சாகத்தை அளிக்கிறது. அதன்படி ஐரோப்பாவில் நடைபெற்ற t10 போட்டியில் ஜாகுவார் அணியின் ஹம்சா அதிரடியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

ஐரோப்பிய டி10 கிரிக்கெட்டின் 45வது போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கேடலுன்யா ஜாகுவார் மற்றும் சோஹல் ஹாஸ்பிடல்டெட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேடலுன்யா ஜாகுவார் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பேட் செய்த ஜாகுவார் அணி பத்து ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 257 ரன்களைக் குவித்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹம்சா சலீம் தார் சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 193 ரன்களைக் குவித்தார். இதில் 14 பவுண்டரிகள், 22 சிக்ஸர்களும் அடங்கும். டி10 கிரிக்கெட்டில் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தார். இது பார்வையாளர்களுக்கு ஒரு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

- Advertisement -

இடது கை ஆட்டக்காரரான இவர், வெறும் அதிரடியாக மட்டும் ஆடாமல் பல நல்ல நேர்த்தியான ஷாட்களையும் அடித்தார். ஆல்ரவுன்டரான இவர் 1995ல் ஸ்பெயினில் பிறந்தவர். இவர் திறமையான வலதுகை வேகப்பந்து வீச்சாளரும் ஆவார். இவருக்கு ஜோடியாக யாசிர் அலி 19 பந்துகளில் 58 ரன்களும் குவித்தார்.

பின்னர் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய ஹாஸ்பிடல்டெட் அணி 10 ஓவர்கள் முடிவில் ஜாகுவார் அணியின் அபார பந்து வீச்சால் 8 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் ராஜா ஷஷாத் அதிகபட்சமாக 25 ரன்கள் குவித்தார்.

ஜாகுவார் அணித்தரப்பில் ஹம்சா 2 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜாகுவார் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜாகுவார் அணியின் ஹம்சா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் ஹம்சா மீது கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை விழத் தொடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.