கடைசி 2 ஓவர் 35 ரன்.. ரஷித் கான் பேட்டிங்கில் காட்டிய மேஜிக்.. குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது

0
203
IPL2024

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 24 (19), ஜோஸ் பட்லர் 8 (10) ரன்கள் எடுத்து வெளியேற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நெருக்கடி உண்டானது.

- Advertisement -

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் மிகச் சிறப்பாக விளையாடி இருவருமே அதிரடியாக அரை சதம் அடித்தார்கள். இந்த ஜோடி 78 பந்துகளில் 130 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரியான் பராக் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 48 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்.

இறுதிவரை நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். ஹெட்மையர் ஐந்து பந்தில் 13 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 196 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் நான்கு ஓவரில் 18 ரன்கள் மட்டும் தந்து 1 விக்கெட் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்ஷன் 35 (29), மேத்யூ வேட் 4 (6), அபினவ் மனோகர் 1 (2) இவர்கள் மூன்று பேர் விக்கெட்டையும் இந்த சீசனில் முதல் முறையாக விளையாடும் குல்தீப் சென் கைப்பற்றினார். இதற்கு அடுத்து விஜய் சங்கர் 10 (16), சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் 72 (44) இவர்கள் இருவர் விக்கெட்டையும் சாகல் கைப்பற்றினார்.

- Advertisement -

ரஷீத் கான் மேஜிக்

இதற்கு அடுத்து நான்கு ஓவரில் 59 ரன்கள் தேவை என்ற நிலையில் தமிழக வீரர் ஷாருக் கான் 14 (8) ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களுக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. ராகுல் திவாட்டியா மற்றும் ரஷித் கான் இருவரும் களத்தில் இருந்தார்கள். ஆவேஸ் கானின் 18 வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே வந்தது. இதற்கு அடுத்து குல்தீப் சென்னின் 19 ஆவது ஓவரில் இருவரும் சேர்ந்து 20 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியாதான் எங்களுக்கு எல்லாமே.. அவர் சக்தி உங்களுக்கு தெரியாது – டிம் டேவிட் பேட்டி

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஸ் கானின் கடைசி ஓவரில் நான்கு பந்தில் ரஷித் கான் 11 ரன்கள் அடித்தார். ஐந்தாவது பந்தில் மூன்று ரன்கள் எடுக்க முயற்சி செய்து இரண்டு ரன்கள் எடுத்து ராகுல் திவாட்டியா ரன் அவுட் ஆனார். இதற்கு அடுத்து கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அந்தப் பந்தை எதிர்கொண்ட ரஷீத் கான் பவுண்டரிக்கு அடித்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றியை பெற்று தந்தார். ராகுல் திவாட்டியா 22 (11), ரஷித் கான் 24* (11) ரன்கள் எடுத்தார்கள். குல்தீப் சென் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.