கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு மிகவும் சுமாராக விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் பதினோரு இன்னிங்ஸ்களில் ஐந்து அரை சதங்கள் உட்பட 407 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 40.60 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 145.36 ஆக உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரு பக்கம் சக்கை போடு போட்டு, மறு பக்கம் நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தனது அதிரடியை காட்ட தயாராக இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் டி20 போட்டிகளில் தன்னுடைய சிறந்த டாப் 5 வீரர்களை அண்மையில் கூறியுள்ளார்.மேலும் இந்த 5 வீரர்களை கொண்ட அவரது அணி, உலகிலுள்ள எந்தவொரு 5 வீர்களை கொண்ட அணியையும் வீழ்த்த கூடிய ஆற்றல் மிக்கது என்றும் கூறியுள்ளார்.
கிளன் மேக்ஸ்வெல் தேர்ந்தெடுத்த டாப் 5 டி20 கிரிக்கெட் வீரர்கள்
மேக்ஸ்வெல் தேர்ந்தெடுத்த அந்த 5 வீரர்களில் எந்த ஒரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை. அவர் தேர்ந்தெடுத்த 5 வீரர்கள் யார் என்றால் ரஷித் கான், அன்ட்ரூ ரஸல், பென் ஸ்டோக்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷான் டைட். இந்த ஐந்து வீரர்கள் மத்தியில் அவருக்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான வீரராக பார்க்கப்படுவது ரஷீத் தான்.
ரஷீத் கான்
தற்பொழுது உள்ள கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் குறிப்பாக டி20 போட்டிகளில் ரஷீத் கான் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சை இன்னும் புரிந்து கொள்ள முடியாமல் நிறைய முன்னணி பேட்ஸ்மேன்கள் தவித்து வருகின்றனர். நிச்சயமாக நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் அவருடைய பந்து வீச்சு மிக பெரிய அளவில் அனைவராலும் பேசப்படும் என்று மேக்ஸ்வெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 281 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 388 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 17.54 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 16.60 ஆகும். பேட்டிங்கிலும் 1288 ரன்களை இவர் குவித்துள்ளார். சர்வதேச அளவில் ரசித்துக் 51 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சர்வதேச அளவில் ரஷீத் கானுடைய பௌலிங் அவரேஜ் 12.63 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 12.10 ஆகும்.
அன்ட்ரூ ரஸல்
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரரான அன்ட்ரூ ரஸல், தனது அணிக்காக எந்த நேரத்தில் எந்த விதமான மாயாஜாலத்தையும் செய்து காட்டக் கூடிய ஆற்றல் உடையவர் என்று மேக்ஸ்வெல் பாராட்டியுள்ளார்.
382 டி20 போட்டிகளில் விளையாடி 6405 ரன்களை 169.66 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். அதேசமயம் 340 விக்கட்டுகளையும் தனது பந்து வீச்சின் மூலம் கைப்பற்றியுள்ளார். சர்வதேச அளவில் 62 போட்டிகளில் விளையாடி 716 ரன்கள் குவித்து , 36 விக்கட்டுகளையும் அன்ட்ரூ ரஸல் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர் வீரராக பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஒரு பயம் இல்லாத அதிரடி கிரிக்கெட் வீரர் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார். நூத்தி நாற்பத்தி எட்டு டி20 போட்டிகளில் விளையாடி 2,865 ரன்களை 135.07 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். பந்து வீச்சிலும் 86 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்காக 34 டி20 போட்டிகளில் விளையாடி 442 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளை பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றியுள்ளார். நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் இவரில்லாமல் களம் இறங்கப் போகும் இங்கிலாந்து அணி, இவர் இல்லாதது குறித்து வருந்தும் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
ஆடம் கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆட்டத்தின் போக்கை மாற்றி எழுதக்கூடிய மாயாஜால வித்தைகளை நன்கு தெரிந்தவர். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவது, கீப்பிங்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என அவளுடைய ஆட்டம் மிக அற்புதமாக இருக்கும் என்று கிளென் மேக்ஸ்வெல் புகழ்ந்து கூறியுள்ளார்.
102 டி20 போட்டிகளில் விளையாடி மூன்று சதங்கள் உட்பட 2622 ரன்களை 140.28 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் கில்கிறிஸ்ட் குவித்துள்ளார். சர்வதேச அளவில் 13 போட்டிகளில் 272 ரன்களை 141.66 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் கில்கிறிஸ்ட் குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஷான் டைட்
அவருடன் நான் விளையாடி இருக்கிறேன். அவருடைய கிரிக்கெட் கேரியரின் கடைசிப் பகுதியில் கூட, மிக சிறப்பாக அதிரடியான வேகத்தில் பந்துகளை வீசி வந்தார். எதிர்முனையில் எந்த ஒரு பேட்ஸ்மேன் நின்று விளையாடினாலும், துளி பயமின்றி அவர் பந்து வீசுவார் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
171 டி20 போட்டிகளில் விளையாடி 218 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 22.41 ஆகும். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் மேல் தொடர்ச்சியாக பந்து வீசகூடியதில் இவர் பெயர் போனவராவார்.