இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
நேற்று 143 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 28 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற, ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான பந்துவீச்சில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இருவரையும் உடனுக்குடன் வெளியேற்றினார்.
இதற்கு அடுத்து அடுத்த போட்டிக்கு அணியில் தொடர்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். இதில் கில்லுக்கு மட்டும் மொத்தமாக மூன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைத்தது.
இதை பயன்படுத்திக் கொண்ட கில் மிகச் சிறப்பாக தாக்குதல் பாணியில் விளையாடி அரை சதம் அடித்தார். அவருடன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடிக்கு மாற நினைத்து இறங்கி வந்து தூக்கி அடிக்க பென் ஸ்டோக்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் பரிதாபமாக 52 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதற்கு அடுத்து உள்ளே வந்த ரஜத் பட்டிதார் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரேகான் அஹமது பந்துவீச்சில் இன்சைடு எட்ஜ் எடுக்க, வந்து தானாக கீப்பர் பென் போக்ஸ் கையில் சென்றது. துரதிஷ்டவசமாக ரஜத் பட்டிதார் வெளியேறினார்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரஜத் பட்டிதார் ஆட்டம் இழந்த முறை அதிர்ஷ்டம் இல்லாத வகையில் அமைந்திருக்கிறது. எனவே அவரை இந்தப் போட்டியோடு வெளியில் வைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
அதே சமயத்தில் கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் மோசமாக செயல்பட்டு வந்த நிலையில், கில் தற்பொழுது அரைசதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருப்பதால், அடுத்த போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்திருக்கிறார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பையும் வீணடித்திருக்கிறார். எனவே அவருடைய இடம் தற்பொழுது ஆபத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க : NZvsSA.. முதல் டெஸ்ட்.. வில்லியம்சன் ரச்சின் ரவீந்தரா மாஸ் பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்
தற்பொழுது இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன் மூலம் 273 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. குறைந்தபட்சம் முன்னிலை 400 ரன்கள் இருக்க வேண்டியது அவசியம். இங்கிலாந்து அணி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய பேட்டிங் அணுகு முறையில் இருப்பதால், போட்டி தற்பொழுது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது.