சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் அணியாக இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் மற்றும் பேட்டிங் வரிசை குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி வெளியேற்றம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தி வரும் பாகிஸ்தான கிரிக்கெட் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதில் தொடக்க வரிசையில் களம் இறங்கிய பாபர் அசாம், 320 ரன்கள் இலக்கை அடைவதற்கு எந்த ஆக்ரோஷமான முயற்சியும் எடுக்காமல் 90 பந்துகளில் 64 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இறுதிக்கட்டத்தில் சல்மான் அலி ஆகா 42 ரன்கள் மற்றும் குஷ்தில் ஷா 69 ரன்கள் அதிரடியாக எடுத்தாலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இதற்கு பின்னர் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 23 ரன்கள் மட்டுமே எடுத்து விரைவாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் இந்திய அணிக்கு எதிராக எந்த பாகிஸ்தான் வீரரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் தினேஷ் கனேரியா பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை குறித்த விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பேட்டிங்கில் ஆழம் இல்லை
இதுகுறித்து அவர் கூறும் போது “பாபர் அசாம் இவ்வளவு காலமாக ரன்கள் எடுக்க வில்லை. ஆனால் அவர் நன்றாக விளையாடுவது ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவோ அல்லது மற்ற சிறிய அணிகளுக்கு எதிராக மட்டும் தான். பெரிய அணிகளுக்கு எதிராக அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் அவர் தனது பேட்டிங்கில் எந்த விதமான ஆக்ரோசத்தையும் காட்டவில்லை. குறிப்பாக பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் ஆழம் இல்லை.
இதையும் படிங்க:இந்திய அணி எங்கு வேணா ஆடட்டும்.. அதைப் பற்றி கவலையே இல்லை.. என் திட்டம் இப்போ இதுதான் – ஜாஸ் பட்லர்
சல்மான் ஆகா மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் ஓரளவு பங்களிப்பை செய்கிறார்கள். சவுத் ஷகில் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான பேட்டர். ஆனால் ரிஸ்வானின் பேட் வேலை செய்வதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட போதே, இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறுவதை கண்டிருக்கலாம்” என்று பேசியிருக்கிறார். இந்த தொடரில் முதல் அணியாக பாகிஸ்தான் அணி தான் வெளியேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






