தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களே இல்லாமல் அழிந்து விட்டதாக டேனிஷ் கனேரியா மிகவும் வருத்தத்துடன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மர்ம சுழல் பந்துவீச்சாளர் என்று அப்ரார் அகமதுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மிகவும் தட்டையான ஆடுகளத்தில் 170க்கும் மேற்பட்ட ரண்களை விட்டு தந்து மிக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
முன்பு பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் செய்வதற்கு சாதகமான தட்டையான ஆடுகளம் அமைக்கப்பட்டாலும் கூட, பந்து தேய்ந்த பிறகு பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் மூலமாக எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து விக்கெட்டை கைப்பற்றுவார்கள். மேலும் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இப்படியான நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அத்துடன் பழைய பந்தில் அவர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்யவும் முடியவில்லை. இங்கிலாந்து அணி அனாயசமாக 823 ரன்கள் குவித்து தோற்கடித்தது.
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறும்பொழுது “பாகிஸ்தான் அணியினர் 823 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நானும் இது போல பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பந்துவீசி இருக்கிறேன். இருந்த போதிலும் எங்களுடைய ஸ்பின்னர்கள் எங்கே? எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கே? எங்களுடைய ரிவர்ஸ் ஸ்விங் எங்கே? பவுன்சர்கள் எங்கே?
“பாகிஸ்தானில் அனைத்து ஸ்பின்னர்களும் அழிந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி பந்து வீசிய ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூட இல்லை என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : ஆர்சிபி வாங்காதப்பவே விராட் என்னிடம் அதை பேசினார்.. நீங்க முட்டாள்னு சொன்னார் – மேக்ஸ்வெல் வெளியிட்ட தகவல்
“பாகிஸ்தான் கிரிக்கெட் அப்ரார் அகமது போன்ற கிளப் கிரிக்கெட்டர்களால் நிறைந்திருக்கிறது. அவர் என்ன வகையான மர்மத்தை சுழல் பந்துவீச்சில் வைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. மொத்தத்தில் இவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்து விட்டார்கள்” என்று வேதனையாக விமர்சனம் செய்திருக்கிறார்.