தற்போது ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று சொந்த மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோதும் போட்டியில் அவருக்கு மோசமான செக் ஒன்று காத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் பேட்டிங் பங்களிப்பு அணிக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆறு போட்டிகளில் விளையாடியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.
ரோகித் சர்மாவின் வினோத வரலாறு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 8 வருடங்களில் ஐந்து கோப்பைகளை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்த அசாத்திய வீரராக ரோஹித் சர்மா இருக்கிறார். அவருடைய இந்த சாதனையை இன்னொரு வீரர் முறியடிப்பது ஐபிஎல் தொடரில் தற்காலத்தில் மிகவும் கடினம். ஏனென்றால் ஒவ்வொரு அணிகளும் மிகவும் பலம் வாய்ந்தவையாக மாறி இருக்கின்றன.
அதே சமயத்தில் ரோகித் சர்மா இதுவரையில் 18 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஒரு சீசனில் 600 ரன்கள் எடுத்ததில்லை. மேலும் அவர் ஒரே ஒருமுறை மட்டுமே 500 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார். இத்துடன் அவர் 80 முறை ஒற்றை இலக்கத்தில் ஐபிஎல் தொடரில் வெளியேறி இருக்கிறார். பேட்ஸ்மேனாக அவருடைய செயல்பாடு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராகவே இருந்து வருகிறது.
ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் செக்
ரோகித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சரியாக செயல்படாதது அந்த அணியையும் பாதித்திருப்பதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. எனவே இன்று சொந்த மைதானத்தில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஏழாவது போட்டியில் ரோகித் சர்மா சிறப்பான முறையில் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட முடியாமல் போய் அணி தோற்றால் அவரை பெஞ்சில் உட்கார வைக்கும் மோசமான சூழ்நிலையும் வரலாம்.
இதையும் படிங்க : ஷமி சிராஜ் சொல்றது கட்டுக்கதை.. வெள்ளை பந்துல இதெல்லாம் நடக்கவே நடக்காது – ஸ்டார்க் வெளிப்படை பேச்சு
மேலும் கடந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் கடும் எதிர்ப்புக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளானார். ஆனால் தற்போது யாரும் சரியாக செயல்பட முடியாத பொழுது ஹர்திக் பாண்டியாவை குறை சொல்ல முடியாது என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இப்பொழுது வித்தியாசமாக ஹர்திக் பாண்டியா மேல் இருந்த அழுத்தம் ரோகித் சர்மா மேல் மாறி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் தப்பிப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






