“தோத்தா திட்றீங்க.. ஜெயிச்சா கண்டுக்க மாட்டிறீங்க” – ராகுல் டிராவிட் குறித்து முன்னாள் இந்திய வீரர் வேதனை.!

0
2524

நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் இந்திய அணியின் வெற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பைக்கு முன்பாக மிகப்பெரிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. சமீப காலமாக ஒரு நாள் போட்டி தொடர்களில் இந்திய அணி பெற்று வந்த தோல்வி விமர்சனத்திற்கு உள்ளானது .

குறிப்பாக கடந்த ஆண்டு பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டி தொடரை இந்தியா இழந்தது. மேலும் இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரையும் 2-1 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. இதன் காரணமாக உலக கோப்பையில் இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்திருந்தது.

- Advertisement -

மேலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் பரிசோதனை முயற்சிகள் கிரிக்கெட் ரசிகர்களாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. சமீபத்திய மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போதும் இந்திய அணி பலவிதமான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாக நீண்ட வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை வர இருக்கும் நேரத்தில் இது போன்ற முயற்சிகள் தேவைதானா என கேப்டன் மற்றும் பயிற்சியாளரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி வெளிப்படுத்தி இருக்கும் விளையாட்டு மற்றும் அதன் வெற்றி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீதான நம்பிக்கையை அதிகரித்து இருப்பதோடு உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையையும் ரசிகர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னால் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான டோட்டா கணேஷ் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு உரிய அங்கீகாரம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பம்பர் சேகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை என விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் அணி தோல்வி அடையும்போது ராகுல் டிராவிட்டை கடுமையாக விமர்சிப்பவர்கள் வெற்றிபெறும் போது அதற்குரிய பாராட்டுக்களை அவருக்கு கொடுக்க தவறி வருகின்றனர் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய அவர் ” இந்திய அணி ஆசியக் கோப்பை போட்டிகளில் சிறப்புமிக்க ஒரு வெற்றியை பெற்றிருக்கிறது. எனினும் ராகுல் டிராவிட்டை யாரும் பாராட்டியதை நான் ட்விட்டரில் காணவில்லை . அணி தோல்வி அடையும்போது அவர் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறார். ஆனால் இந்திய அணி வெற்றிபெறும் போது அனைவரும் அவரை மறந்து விடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய டோட்டா கணேஷ்” இது போன்ற ஒரு உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்திய அணி நிச்சயமாக இந்த வருட உலக கோப்பையை வெல்ல வேண்டும். அதுதான் ராகுல் டிரா வீட்டுக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த அங்கீகாரமாக இருக்கும். இந்தியாவில் அதிகம் பாராட்டப்படாத ஒரே ஹீரோ அவர்தான்” என தெரிவித்திருக்கிறார்.