இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர், ஒருநாள், டி20 என எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி உள்நாடு வெளிநாடு என எதிலும் பாரபட்சம் காட்டாமல் தங்களது திறமையை நிரூபித்து வருகிறது. இதில் இந்திய அணிக்கு இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என அனைவரும் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நிலைத்தன்மை குறித்து வங்கதேச அணியின் முன்னாள் வீரர் தமீம் இக்பால் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கிரிக்கெட்டில் வல்லரசு நாடாக திகழ்ந்துவரும் இந்திய அணி கடந்த சில வருடங்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2007ம் ஆண்டுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வெல்வதற்கு தகுதி இருந்தாலும் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என முக்கியமான கட்டங்களில் தோல்வியடைந்து வந்த நிலையில் தற்போது அதையும் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு தோல்வி அடைந்த ஒரு நாள் உலக கோப்பையிலும் இறுதிப் போட்டியை தவிர அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் வகித்து வரும் நிலையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சூழ்நிலையில் வர்ணனையாளராக பணியாற்றி வரும் வங்கதேச அணியின் முன்னாள் வீரர் தமீம் இக்பால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றோரை காட்டிலும் பிசிசிஐ வலுவாக இருப்பதால்தான் இந்திய அணியால் பல்வேறு சாதனைகளை செய்ய முடிகிறது என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் எதை சாதிக்க வேண்டும் என்பதில் தெளிவான திட்டம் இருக்க வேண்டும். கேப்டன் கோப்பையை வெல்ல விரும்புகிறார், பயிற்சியாளர் கோப்பையை வெல்ல விரும்புகிறார், ஆனால் இதில் கேள்வி என்னவென்றால் கிரிக்கெட் நிர்வாகமும் இதை விரும்புகிறதா என்பதுதான். இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டி பேசலாம். ஆனால் பிசிசிஐ வலுவாக இல்லை என்றால் இந்திய அணியால் இவ்வளவு சாதிக்க முடியாது.
முந்தைய பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தில் மூன்று முன்னாள் கேப்டன்கள் இருந்தார்கள். இதற்கு முன்னாள் செயல்பட்ட கிரிக்கெட் வாரியம் தவறு செய்ததா? என்றால் இல்லை. அவர்களும் நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்கள் எனவே அதை மறுக்க முடியாது. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தில் எனக்கு இரண்டு அல்லது மூன்று பேருடன் பிரச்சனை இருந்திருக்கலாம். அதற்காக அவர்கள் எதையும் சாதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.
இதையும் படிங்க:147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. இந்தியா 10.1 ஓவரில் மெகா சாதனை.. ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம்
இந்த முறை வங்கதேச குடியரசுத் தலைவரும் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கிறார். அதனால் அவருக்கு என தனியாக ஒரு கால அவகாசத்தை கொடுத்து அதற்குப் பிறகு மதிப்பிட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.