“யாரையும் கண்டுக்காதிங்க.. இத மட்டும் செய்யுங்க.. உலக கோப்பை இந்தியாவுக்குதான்” – ஏபிடி கொடுத்த கிரேட் ஐடியா!

0
1468
Devilliers

கடந்த வாரத்தில் இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் இருக்கும் பொழுது, இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணி மீது ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என்று பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருந்து வருகிறது.

- Advertisement -

மேலும் உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாரிப்பில் முக்கிய வீரர்களின் காயம் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி இருந்தது. இதன் தாக்கம் இப்பொழுது வரை இந்திய அணியில் இருந்து வருகிறது. குறிப்பாக யார் அணியில் நிரந்தரமாக இடம் பெறுவார்கள்? யாருக்கு எந்த இடம்? என்பது குறித்தான தெளிவுகள் இல்லை.

இதன் காரணமாக இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடுவதால் உலகக் கோப்பையை வெல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று கூறக்கூடியவர்கள் கூட, இந்திய அணி உறுதியாக உலகக் கோப்பையை வெல்லும் என்பதாகக் கூறுவதில்லை.

உலகக் கோப்பை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வெளிநாட்டு முன்னால் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் யாரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி மீது நல்லவிதமான அபிப்பிராயத்தை கொண்டிருக்கவில்லை. அவர்களின் பார்வையில் இந்திய அணி பலவீனமாகவே தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும், வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணி பற்றி கருத்து கூறக்கூடாது, இந்தியர்கள் யாரும் இந்த வேலையை செய்வதில்லை என்று தங்களது கடுமையான கண்டனங்களை பதிவுசெய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணிக்கான உலகக் கோப்பை வாய்ப்பு பற்றியும் உலகக் கோப்பை இந்திய அணியைப் பற்றியும் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில்
“இந்திய அணி நம்ப முடியாதது மற்றும் உண்மையில் மிகவும் வலிமையானது என்று நான் நினைக்கிறேன். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகவும் திறமையானவர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை எனக்கு இருக்கும் ஒரே கவலை, அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவதுதான். கடந்த முறை சொந்த மண்ணில் விளையாடும் போது அவர்கள் கோப்பையை வென்றார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு பெரிய அழுத்தம் இருக்கும். என் கருத்துப்படி இதுதான் தடையாக இருக்கிறது.

பயப்படாமல் செல்லுங்கள். இதுதான் நான் உங்களுக்கு சொல்லும் வார்த்தை. நாடு உண்டாக்கும் அழுத்தத்தை மறந்து விடுங்கள். அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததை மட்டும் கட்டுப்படுத்துங்கள். அச்சமற்று இருங்கள். இதை இந்திய அணி செய்ய முடிந்தால், தொடரில் நீண்ட தூரம் சென்று உலகக் கோப்பையை உயர்த்துவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!