நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவுக்குப் பிறகு, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்ட விவகாரம் குறித்து சுப்மன் கில்லை விமர்சித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார். தொடக்கத்தில் நியூசிலாந்து அணி தடுமாறினாலும், பின்னர் வலுவான நிலைக்குத் திரும்பியது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “விளையாடும் வீரரோ அல்லது விளையாடாத வீரரோ பொறுப்பல்ல. முடிவு எடுப்பவர்கள்தான் பொறுப்பு. அணியின் கலவையை முடிவு செய்ய ஒரு வாரம் ஆனதாகக் கில் கூறினார். ஏழு நாட்கள் ஏன் முடிவு எடுக்கிறீர்கள் என்பதுதான் எனது கேள்வி. போட்டிக்கு முந்தைய நாள் பிட்ச்சைப் பார்த்து அணியை முடிவு செய்திருக்க வேண்டும்”
“ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 12 வீரர்கள் கொண்ட அணியை வைத்துக்கொண்டு போட்டி நாளில் அதிலிருந்து 11 பேரை அறிவிக்க வேண்டும். இது ஒரு வீரரின் தன்னம்பிக்கையைக் குலைக்கும். கடந்த 18 மாதங்களாக இதுபோன்ற குழப்பமான முடிவுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், தனக்கு காயம் இல்லை என்பதை யாரும் சந்தேகிக்காத வகையில் ஜடேஜா புத்திசாலித்தனமாக மைதானத்திற்குள் வந்தார். அதேபோல, சிராஜும் மைதானத்திற்குள் வந்து கேமரா முன்பு கைதட்டினார். எனவே, அவர்கள் இருவருக்கும் காயம் இல்லை என்பது இப்போது நமக்குத் தெரியும். அவர்கள் இருவரும் பிளேயிங் லெவனில் விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






