இந்த உலககோப்பையை விராட் கோலிக்காக ஜெயிக்க வேண்டும்! 2011ல் சச்சினுக்கு நடந்ததை ரீ-கிரியேட் செய்யுங்கள்! – சேவாக் கோரிக்கை!

0
545

“உலகக்கோப்பையை விராட் கோலிக்காக அனைவரும் சேர்ந்து வெற்றிபெற்றுக் கொடுக்க வேண்டும். விராட் கோலி போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரரின் கெரியருக்கு இது நல்ல முடிவாக இருக்கும்.” என்று பேசியுள்ளார் விரேந்திர சேவாக்.

2011ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இந்த வருடம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பைக்கான போட்டிகள் அட்டவணை இன்று மும்பையில் வெளியிடப்பட்டது. அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.

- Advertisement -

மொத்தம் பத்து மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. கூடுதலாக இரண்டு மைதானங்களில் பயிற்சி போட்டிகள் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன.

மும்பையில் போட்டி அட்டவணை வெளியிட்ட நிகழ்வில் விரேந்திர சேவாக், முத்தையா முரளிதரன் இருவரும் பங்கேற்றனர். அப்போது 2011ஆம் உலகக்கோப்பை நினைவுகளை பகிர்ந்துகொண்டார். விராட் கோலி குறித்தும் பேசினார். சேவாக் பேசியதாவது:

“2011ம் ஆண்டு உலகக்கோப்பையை அணியில் இருக்கும் அனைவரும் சச்சின் டெண்டுல்கருக்காக விளையாடினோம். ஒருவேளை அந்த உலககோப்பையை நாம் வெற்றி பெற்றால் சச்சின் டெண்டுல்கரின் கெரியருக்கு நல்ல முடிவுரையாக அமைய வேண்டும் எனவும் நினைத்தோம். அப்படி ஒரு சூழல் இந்த வருடமும் வந்திருக்கிறது. விராட் கோலிக்காக அணியில் இருக்கும் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பையை வெற்றி பெறுவதற்கு நினைக்கிறார்கள். அவரைப்போன்ற தலைசிறந்த வீரரின் கெரியருக்கு சிறந்த முடிவு அமையும்.

- Advertisement -

விராட் கோலி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய 100 சதவீதத்திற்கும் அதிகத்தையே கொடுக்க நினைத்து விளையாடியுள்ளார். தலைசிறந்த கிரிக்கெட் வீரர். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது சச்சின் டெண்டுல்கரை தலையில் தூக்கி வைத்து மைதானத்தை சுற்றி வந்தவர் விராட் கோலி.

2015, 2019 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலககோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்டது துரதிஷ்டவசமாக அரையிறுதி வரை சென்று வெளியேறியுள்ளது. இந்த வருடம் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றியும் பெறுவார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த வருடம் உலகக்கோப்பையை வெல்வதற்கு விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அதிக ஸ்கோர்களை அடிப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பார் என நினைக்கிறேன். இந்திய மைதானங்களை நன்கு உணர்ந்தவர். எந்த பிட்ச் எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை தெரிந்து வைத்திருக்கக் கூடியவர். ஆகையால் நிறைய ரன்களை குவிப்பவர்களில் ஒருவராக இருப்பார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு லட்சம் ரசிகர்களின் முன்னிலையில் விராட் கோலி எப்படி செயல்பட உள்ளார் என்பதை காண்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை தலைசிறந்த வீரர் என்பதை காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.” என சேவாக் பேசினார்.