“இந்தியா கூட தோத்ததுதான் பாகிஸ்தான் கூட ஜெயிக்க வச்சது.. எங்க மக்களுக்காக பைனல்ல..!” – இலங்கை கேப்டன் சனகா பேச்சு!

0
5944
Shanaka

பதினாறாவது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இரண்டாவது சுற்றில், தங்களின் கடைசிப் போட்டியில், இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் பாகிஸ்தான் அணியை, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் சென்று, ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி, ஆசியக்கோப்பை இறுதி போட்டியில், இந்தியா இலங்கை அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.

- Advertisement -

இன்று மழையால் பாதிக்கப்பட்ட போட்டி 42 ஓவர்களாக நடத்தப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 252 ரன்கள் எடுத்தது. மழையின் காரணமாக 252 ரன்கள் இலங்கைக்கும் இலக்கு கொடுக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை கடைசி ஓவரில் எட்டு ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் மூன்று விக்கெட்டுகள் இருக்க, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, கடைசிப் பந்தில் இலங்கை திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆசியக் கோப்பை தொடரில் மிக உறுதியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று பாகிஸ்தான் அணியை பலரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு அடுத்து பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றி பெற்ற இலங்கை கேப்டன் பேசுகையில் “நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் வருவதற்கு நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டோம். ஆனால் அசலங்கா எங்களை வெற்றிபெற செய்வார் என்பது எங்களுக்கு தெரியும்.

பேட்டிங் செய்வதற்கு முன்பாக பயிற்சியாளர் உடன் சேர்ந்து நாங்கள் இந்திய அணிக்கு எதிராக என்ன தவறுகள் செய்தோம்? என்று விவாதித்தோம். நாங்கள் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டை கொடுத்திருந்தோம். இந்த முறை அதைச் செய்யக்கூடாது என்று முடிவு செய்தோம்.

குசால் மெண்டிஸ் மற்றும் சதீரா இருவரும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் இருவரும் தற்சமயத்தில் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று நினைக்கிறேன். அசலங்கா தன்னுடைய சிறந்த கேரக்டரை வெளிப்படுத்தினார். எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து, இறுதிப்போட்டியில் எங்களைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கும் மக்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்.