“எங்க கூட இந்தியா திறமையை வீணடிக்க போகுது.. இதான் நடக்கும்!” – ஜானி பேர்ஸ்டோ கருத்து!

0
464
Bairstow

தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதிக் கொண்டால்தான், அந்தத் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது.

எனவே டெஸ்ட் கிரிக்கெட் நோக்கி ரசிகர்களை ஈர்க்கவும், டெஸ்ட் கிரிக்கெட்டை மேற்கொண்டு காப்பாற்றவும் இந்த மூன்று அணிகளும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது.

- Advertisement -

இப்படியான நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இரு அணிகளுக்குமே நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடர் மிக மிக முக்கியமானதாக அமைகிறது.

அதேசமயத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியாக அணுகி வருகிறது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில், இங்கிலாந்து அணியால் வழக்கமான அதிரடியான முறையைப் பின்பற்ற முடியுமா? என்கின்ற பெரிய கேள்வி இருக்கிறது.

- Advertisement -

இப்படியான காரணங்களால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இடையே இந்த டெஸ்ட் தொடருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. நடைபெறும் ஐந்து போட்டிகளுக்கும் ரசிகர்கள் பெரிய அளவில் மைதானங்களுக்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்தத் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ கூறும்பொழுது “இங்கே பாருங்கள் நிச்சயமாக இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்தான் போடப்படும். ஆனால் பந்து முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் திரும்புமா என்று தெரியாது. இப்படியான ஆடுகளங்கள் அமைப்பதால், அவர்கள் தங்களின் வேகப்பந்து வீச்சு திறமையை மறந்து விடுவார்கள். வேகப்பந்து வீச்சில் அவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

இந்தியாவுக்கு வேறு ஆடுகளங்களை உருவாக்க முடியும். கட்டாயம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம்தான் தேவை என்று கிடையாது. சமீப காலத்தில் அவர்கள் மிகச்சிறந்த முறையில் வேகப் பந்துவீச்சில் உருவெடுத்திருக்கிறார்கள்.

கடந்த முறை நாங்கள் இந்தியா வந்த பொழுது எங்களுக்கு எதிராக அஸ்வினும் அக்சர் படேலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். அந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் எங்கள் அணி வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஜோ ரூட் இரட்டை சதம் அடித்திருந்தார்” என்று கூறியிருக்கிறார்!