“நான் முதல் பந்துல அவுட் ஆனாலும் பரவாயில்ல.. இதில் வெட்கப்பட ஒன்னும் இல்ல” – சூரியகுமார் அதிரடி பேட்டி!

0
1183
Surya

இந்திய அணி ஆசிய கோப்பைக்கு தயாராக கர்நாடக மாநிலம் ஆலூரில் ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் மிக வேகமாக தயாராகி வருகிறது. இந்த பயிற்சி முகாம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை க்கும் உதவக்கூடிய ஒன்று. ஒவ்வொரு தனிப்பட்ட வீரரின் ஆட்ட அணுகுமுறையையும் தேவையான அளவு மாற்றி அமைத்துக் கொள்ள இந்த பயிற்சி முகாம் உதவி செய்யும்.

தற்போது நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் விராட் கோலி நடு ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை சமாளிக்க, கிரீசுக்குள் உள்ளே சென்று நின்று வித்தியாசமாக விளையாடி வருகிறார். இன்னொரு புறம் பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகினை சமாளிக்க ரோகித் சர்மா தொடர்ந்து பயிற்சிகள் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் ஒரு போட்டியில் எந்த இருவர் சேர்ந்து விளையாட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறதோ, அந்த படியான ஜோடிகள் களம் இறக்கப்பட்டு விளையாடி வருகிறார்கள். இப்படி இந்த பயிற்சி முகாமில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சூரியகுமார் யாதவ், ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகவும் மோசமான செயல்பாட்டையே கொண்டிருக்கிறார். தற்பொழுது அணியில் இடம் பிடித்து இருக்கும் அவரும், இந்த பயிற்சி முகாமில் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள பயிற்சி செய்து வருகிறார்.

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “எனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்ய நான் முயற்சி செய்வேன். ஒருநாள் கிரிக்கெட் ஒரு வடிவம் ஆகும். இதில் நன்றாக செயல்பட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் உங்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் நான் இதற்காக பயிற்சி செய்து வருகிறேன்.

- Advertisement -

மூன்று வடிவ கிரிக்கெட்டையும் எடுத்துக் கொண்டால் ஒருநாள் கிரிக்கெட் வடிவம்தான் மிகவும் சவாலானது. இங்கு சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடுவது மிகவும் அவசியம்.நான் இதற்காக உழைத்து வருகிறேன். மேலும் ராகுல் டிராவிட் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த முறை நான் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் என்னுடைய தடைகளை உடைத்து வந்து விடுவேன் என்று நம்புகிறேன்.

நான் களம் இறங்குவதற்கு முன்னாள் பெவிலியனில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். பேட்டிங் செய்வதற்காக காத்திருக்கிறேன். நான் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் வெளியே காத்திருக்கும் பொழுது எனது இதயத் துடிப்பு எப்பொழுதும் அதிகமாக இருக்கும். நான் எப்படி பேட்டிங் செய்யப் போகிறேன் என்று கற்பனை செய்து பார்ப்பேன்.

என் இதயத்துடிப்பு ஏற்கனவே அதிகமாக இருப்பதால், நான் விளையாடுவதற்கு ஏற்கனவே தயாராகி விட்டேன். எனவே நான் உள்ளே சென்றதும் முதல் பந்தில் இருந்தே அடிக்கலாம். இப்படி அடிப்பதற்கு வெட்கப்பட ஒன்றும் கிடையாது. ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிப்பது, ரன்களுக்காக விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது மாதிரியான நேரங்களில், நான் வேறு ஒரு உலகத்தில் இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!