இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளைய தொடங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி எப்படி அணுகும்? என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் பேசியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்தியாவிற்கு வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்து பேசி இருக்கும் பிரண்டன் மெக்கலம் கூறும் பொழுது “இந்த தொடரில் கேப்டன் ஜோஸ் பட்லர் முழுக்க ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே செயல்படுவார். அவர் இந்த முறை விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார். பந்துவீச்சாளர்களுடன் அருகில் இருந்து பேசி கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்யவும் இது வசதியாக இருக்கும். மேலும் எங்களிடம் இன்னொரு விக்கெட் கீப்பர் பில் சால்ட் இருக்கிறார். அவர் விக்கெட் கீப்பிங் வேலையை பார்த்துக் கொள்வார்”
“மேலும் நான் தொடர்ந்து கேப்டன் ஜோஸ் பட்லர் உடன் பேசி வருகிறேன். எங்களுக்குள் சில காலமாக நல்ல நட்பு இருந்து வருகிறது. இது இந்த வெள்ளைப்பந்து குழுவை மேல் நோக்கி எடுத்துச் செல்வதற்கு எனக்கு பெரிய உதவியாக இருக்கும். தனது தொழில் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஜோஸ் பட்லர் இதை அனுபவித்து விளையாட தயாராக இருக்கிறார்”
“இந்தியா அணிக்கு எதிராக விளையாட இருக்கும் தொடர் எவ்வளவு கடுமையாக இருக்கும்? என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒரு சிறந்த அணிக்கு எதிராக விளையாட வருகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். இதுகுறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாகவும் காத்திருக்கிறோம். எனவே நாங்கள் இந்தத் தொடரை கவனமான முறையில் அணுகி விளையாடும் பாணியில் விளையாடப் போகிறோம்”
இதையும் படிங்க : என் மகனுக்கு எதிரா கேரள கிரிக்கெட்ல இருக்காங்க.. உண்மையில் நடந்தது இதுதான் – சஞ்சு சாம்சன் தந்தை பேட்டி
“உலகின் சக்தி வாய்ந்த பேட்டிங் வரிசை எங்களிடம் இருக்கிறது. மேலும் எங்களிடம் தரமான சுழல் பந்துவீச்சு தாக்குதல் இருக்கிறது. மேலும் மிகச் சிறப்பான முறையில் வேகமாக பந்து வீசும் ராக்கெட் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது எங்களுக்கு அதிகப்படியான வாய்ப்பை உருவாக்குவதற்கும் வெற்றி பெறுவதற்கும் மகிழ்வதற்கும் அடித்தளமாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.