இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமான தோல்வியை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தோல்விக்கான காரணங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
142 ரன் வித்தியாசத்தில் தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். 102 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 112 ரன்கள் குவித்தார். விராட் கோலி 52 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்கள் குவித்தனர்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறி வந்த இங்கிலாந்து அணி கடைசியாக 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் இந்த போட்டியில் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 6 ரன்கள் எடுத்து ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
தொடக்கம் சிறப்பாக உள்ளது
இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து பட்லர் பேசும் போது “இந்திய தொடர் ஒரு முழு சுற்றுப்பயணம் போலவே இருந்தது. பேட்டிங் குறித்து கூறும் போது நாங்கள் ஒரு அணியாக அருமையாக விளையாடினோம். எங்கள் பேட்டிங் அணுகுமுறை சிறப்பாக இருந்தது ஆனால் சரியான முறையில் செயல்படவில்லை என்பதே முக்கிய கருத்தாகும். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஸ்கோர் போர்ட்டில் இந்திய அணி சவாலான இலக்கை நிர்ணயித்தது.
இதையும் படிங்க:2வது பந்தில் அவுட்.. அவருக்கு எனது நன்றி.. ஆனா அடுத்து என் திட்டம் இதுதான் – ரோஹித் சர்மா பேட்டி
சுப்மான் கில் ஒரு சிறந்த தொடக்கத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் மீண்டும் சிறந்த தொடக்கத்திற்கு வந்தோம். ஆனால் இந்த முறையும் எங்களுக்கு மீண்டும் பழக்கமான கதையானது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ய ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தொடரில் ஒரு சவாலான நல்ல அணியை நாங்கள் எதிர்கொண்டோம். அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்” என்று பேசியிருக்கிறார். இங்கிலாந்து அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தோல்வியை மறந்து நேர்மறையாக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.