இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு அடுத்ததாக பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி மிகவும் நம்பிக்கையோடு இந்திய அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. ஆனால் சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிகள் இரண்டு வடிவத்தொடர்களிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை வெறும் கையுடன் தாயகம் திரும்ப வைத்திருக்கிறது. இருப்பினும் வருகிற 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தோல்வி இங்கிலாந்து அணிக்கு எதிர்மறையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவது எங்கள் இலக்கு என இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கட் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வதற்கு முன்னர் இதே போல இரண்டு தொடர்களில் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது என சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது வெளிப்படையாக சவாலான விஷயம் ஆகும். ஆனால் இங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்த அனுபவம் நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இதைப் பார்த்து நாங்கள் போட்டிகளில் தோற்று வருகிறோம் என்று சொல்லலாம். ஆனால் 2019ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியும் இங்கு தோல்வியடைந்து இருக்கிறது.
இதையும் படிங்க:கோலி இந்த பிரச்னைல சிக்குவார்னு முன்னாடியே தெரியும்.. அவருக்கு நான் சொல்றது இதுதான் – முன்னாள் ஜாம்பவான் கெயில்
நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் போது வெளிநாட்டு நிலைமைகளில் இருக்கும் மற்ற அணிகளுக்கு எதிராக நாங்கள் விளையாட போகிறோம். எனவே அங்கு நிலைமைகள் மாறக்கூடும். இந்திய தொடரை நாங்கள் இழந்துவிட்டாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் போது அது எங்களை தொந்தரவு செய்யாது. நாங்கள் போட்டி கிரிக்கெட்டுக்கு பழக வேண்டும், இது முற்றிலும் மாறுபட்ட உணர்வாகும். எனவே இங்கிருந்து எந்த நிகழ்வுகளையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்பதே எனது கருத்து” என பேசி இருக்கிறார்.