இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறார். இருப்பினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 5 ரன்னில் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் விராட் கோலி குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
மோசமான பார்மில் விராட் கோலி
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 முறை ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து வெறுப்பை ஏற்படுத்தினார்.
இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் அனைவரையும் சற்று கோபப்படுத்தியது. இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிய நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் விராட் கோலி ஐந்து ரன்னில் விக்கெட் கீப்பர் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி ஜாம்பவான் கிறிஷ் கெயில் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
எனக்கு இது முன்பே தெரியும்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” பார்மை பொருட்படுத்தாமல் கூறினால் விராட் கோலி இன்னும் உலகின் சிறந்த வீரர் ஆவார். அவர் எத்தனை பார்மெட்டுகளில் சதம் அடித்திருக்கிறார் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன. நாம் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் படிப்படியாக கடந்து செல்லக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. இது போன்ற மோசமான நிலை, விராட் கோலியின் வாழ்க்கையிலும் வரும் என்பது எனக்கு முன்பே தெரியும்.
இதையும் படிங்க:119 வருட தென் ஆப்பிரிக்க சாதனை.. தூள் தூளாக உடைத்த அயர்லாந்து.. அபார வரலாற்று வெற்றி
இவை நடக்கும் என்பதால் விராட் கோலி தன்னை தானே சரி செய்து மீண்டும் எழுந்து வர வேண்டும். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடிப்பது என்பது மிகவும் எளிதான காரியம். விராட் கோலி இன்னும் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரால் 200 ரன்கள் அடிக்க முடியும். மேலும் அவர் நிச்சயமாக ஒரு சதம் அடிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே அவர் இந்த சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் சிறிது நேரம் அவருக்கு தேவைப்படும்” என்று கூறியிருக்கிறார்.






