இங்கிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்பாக, உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக, நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது!
இந்த இரண்டு தொடர்களில், முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து வென்று இருந்த நிலையில், மீண்டு எழுந்து வந்த நியூசிலாந்து அணி, அடுத்த இரண்டு போட்டிகளை வென்று அதிரடியாக தொடரை சமன் செய்தது.
இந்த நிலையில் நேற்று நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி இங்கிலாந்து கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக வலதுகை வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கிஸ்டன் அறிமுகமானார். டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வந்த டேவிட் மலான் 54(53) மற்றும் ஹாரி புரூக் 25(41) ரன்கள் என ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இங்கிலாந்து அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. இதற்கு அடுத்து வந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்களான பென் ஸ்டோக்ஸ் 52(69), கேப்டன் ஜோஸ் பட்லர் 72(68) என இருவரும் அரை சதங்கள் அடித்து நல்ல பார்ட்னர்ஷிப் தந்தார்கள். இதற்கு அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 40 பந்துகளில் மூன்று பவுண்டரி, மூன்று பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்தார்.
ஆட்டம் இழக்காமல் டேவிட் வில்லி 11 பந்தில் 22, ஆட்டம் இழக்காமல் கிறிஸ் வோக்ஸ் நான்கு ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 291 ரன் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா பத்து ஓவர்களுக்கு 48 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதற்கடுத்து சவாலான இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் வில் யங் 29(33), ஹென்றி நிக்கோலஸ் 26(30) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே உடன் டேரில் மிட்சல் ஜோடி சேர, நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி மிகச் சிறப்பாக முன்னேற ஆரம்பித்தது. தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் தாண்டி, நிலைத்து நின்று சதம் அடித்து அசத்தினர்.
இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. முடிவில் 45.4 ஓவரில் இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. டெவோன் கான்வே 121 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 111 ரன்கள், டேரில் மிட்சல் 91 பந்துகளின் 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 118 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்கள்!