“டிராவிட் ரெடி பண்ணும் பசங்க சாதாரணமில்ல… இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிடையாது” – ஆன்ட்டி ஃபிளவர் பேச்சு

0
276
Andy

தற்போது கிரிக்கெட் உலகத்தில் இந்தியா- இங்கிலாந்து மோதிக்கொள்ள இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இங்கிலாந்து அணி சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியான முறையில் அணுகி வருகிறது. அவர்களின் அச்சமற்ற டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் பெருமையாக கருதுகிறது. மேலும் அவர்கள் இந்த அணுகு முறையால் சராசரியாக வெற்றிகளையும் பெற்று வருகிறார்கள். எனவே நிச்சயமாக இந்தியாவில் இந்த அணுகுமுறையை அவர்கள் மாற்றிக் கொள்ளப் போவது கிடையாது.

அடுத்து இங்கிலாந்து இப்படியான அதிரடி அணுகு முறையை கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் சுழற்சிக்குச் சாதகமான ஆடுகளங்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய தரமான சுழப்பந்துவீச்சாளர்களை எதிர்த்து எப்படி விளையாட முடியும்? என்கின்ற சுவாரசியமான கேள்வியும் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தத் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி பிளவர் கூறும் பொழுது “நான் கணிப்பு எதுவும் செய்யவில்லை. இந்திய அணியை டெஸ்ட் தொடரில் இந்தியாவில் வைத்து இங்கிலாந்து வீழ்த்தினால் நான் ஆச்சரியப்படுவேன். ஏனென்றால் இந்தியா அவர்களுடைய சொந்த சூழ்நிலையில் நம்பிக்கையான மற்றும் சிறந்த அணி.

- Advertisement -

ராகுல் டிராவிட்டால் அவர்கள் மிகவும் நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இந்தியா ஒரு சிறந்த தாக்குதலை கொண்டிருக்கிறது. நாம் அவர்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களை பற்றி மட்டும் அதிகம் பேசுகிறோம். ஆனால் அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்களும் மிகச்சிறந்தவர்கள். அவர்களுடைய திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்தியாவில் இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் மிகவும் வெற்றிகரமான வீரராக இருப்பார். அவருடைய ஆட்டத்தை நான் பார்க்க விரும்புகிறேன். இந்திய பேட்டிங் வரிசை எவ்வாறு அமையும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் இது குறித்து என்னால் கூற முடியவில்லை.

இங்கிலாந்து அதிரடியான தாக்குதல் பாணி ஆட்டத்தை கொண்டு இருக்கிறது. இது பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமான சண்டையாக இருக்கிறது. இந்தியாவில் உலகத்தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, இங்கிலாந்து தங்களுடைய அதிரடி அணுகு முறையில் எப்படி விளையாடப் போகிறது என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.