“2024 டி20 உலக கோப்பையில் ரிங்கு சிங் வேண்டாம்; நான் சொல்ற இவரை எடுங்க” – கம்பீர் அதிரடி பேச்சு!

0
3359
Gambhir

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இடம்பெற்று இருக்கிறார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ஜெயஸ்வால் அறிமுக டெஸ்டில் சதம் அடித்தும் இரண்டாவது டெஸ்டில் அரைசதம் அடித்தும் தனது தேர்வை அதிகபட்ச நியாயப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பான முறையில் பினிஷிங் இடத்தில் இளம் இடது கை பேட்ஸ்மேன் செயல்பட்டு இருந்தார். அவர் அதிரடியாக விளையாடக் கூடியவராக மட்டும் இல்லாமல், சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடுபவர் ஆகவும் இருந்தது, அவரை மிகவும் கவனிக்க கூடிய ஒருவராக மாற்றியது.

இந்த நிலையில் எல்லோருக்கும் முன்பாக இந்திய வெள்ளைப்பந்து அணியில் ஏதாவது ஒன்றில் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எந்த அணியிலும் வாய்ப்பு தரவில்லை. இது அந்த நேரத்தில் மிகவும் சர்ச்சையான முடிவாக பார்க்கப்பட்டது.

அதே சமயத்தில் சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங்குக்கு இடம் அளிக்கப்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்து அயர்லாந்து டி20 தொடரில் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் ரிங்கு சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு தரக்கூடாது என்று வெளிப்படையாகவே கம்பீர் பேசி இருப்பது பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது
“ஜெயஸ்வால் உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் தரப் போட்டிகளிலும் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரட்டை சதம் எடுத்த வீரராக இருக்கிறார். இதற்கு முன்னால் அவர் ஐபிஎல் தொடரில் எடுத்த ரன்கள் எல்லாம் சாதாரண ஒரு விஷயம்தான். எனவே அவர் அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வைக்கப்பட வேண்டும்.

ரிங்கு சிங்கின் கதை ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் அவரும் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். ஆனால் ஒரு ஐபிஎல் சீசனுக்கு பிறகு உடனே யாரையும் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டாம். உள்நாட்டு சீசனில் ரன்கள் குவித்து விட்டு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வந்து நன்றாக விளையாடி ரன்களை அடிக்கட்டும்.

இப்படி அவர் நிலையாக ரன்கள் எடுத்தால், அவரை இந்திய அணியில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டில் இரண்டு மாத கால ஐபிஎல் தொடரை நாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது தான் நமக்கு பெரிய பிரச்சனை!” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.