ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, இதுவரையில் 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, உலக டி20 லீக்குகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில், ஆஸ்திரேலியாவின் மறைந்த லெஜெண்ட் சுழற் பந்துவீச்சாளர் சேன் வார்ன் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் இருந்து வழிநடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனாகி அசத்தியது.
அதற்குப் பிறகு அந்த அணிக்கு பெரிதான ஐபிஎல் செயல்பாடு கிடையாது. ராகுல் டிராவிட் வார்னேவுக்குப் பிறகு கேப்டனாக இருந்து குறிப்பிடும் வகையில் செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டார். அவரின் சில முடிவுகளின் படி சாகல் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டு, கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கும் சென்றது. அவருடைய தலைமையின் கீழ் அணி தற்போது நல்ல முறையில் கட்டப்பட்டும் இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில் சஞ்சு சாம்சனின் கேரளாவை சேர்ந்த, மேலும் அவரது மாநில அணியில் சஞ்சு சாம்சனை கேப்டனாக வழி நடத்திய ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்க வேண்டும் என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீஷாந்த் கூறும் பொழுது “என்னைப் பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அவர்கள் அமைப்பை மாற்ற வேண்டும். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது அவர்கள் ஒரு முழுமையான அமைப்பை கொண்டிருந்தார்கள். டிராவிட் பாய் அவர்களது கேப்டனாக இருந்தார். அவர் அவர் நல்ல தொலைநோக்கையும் வியூகத்தையும் கொண்டவராகவும் இருந்தார். நான் விளையாடிய கேப்டன்களில் அவர் மிகச் சிறந்தவர்.
சஞ்சு கேப்டனாக இருப்பதில் அவர் அதனுடைய தீவிரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பட்லரை கேப்டன் ஆக்க வேண்டும். குறைந்தபட்சம் பட்லர் ஒரு உலகக் கோப்பையை வென்று இருக்கிறார். அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ரோகித் போன்ற தீவிரம் மற்றும் நிலைத்தன்மை கொண்ட கேப்டன் தேவை. தொடர்ச்சியான போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்.
ஒரு கேப்டனாக உங்களுக்கு போட்டியை வெல்லும் ஒரு வீரர் தேவை. ஒவ்வொரு போட்டியிலும் இல்லை என்றாலும் கூட பெரிய தொடர் என்பதால் மூன்று முதல் நான்கு போட்டிகளுக்கு தேவை. ஆனால் ஒரு தொடரில் ஒரு முறை மட்டும் விளையாட கூடிய வரை நம்ப முடியாது. சஞ்சு சாம்சன் எப்போதாவதுதான் ரன் எடுக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!