நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோஸ் இங்கிலீஷ் அதிரடியாக 50 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார்.
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஸ்டாய்னிஸ் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து ஜெய்ஸ்வால் 10 ரன்கள் உடன் அமர்க்களமாக ஆரம்பித்தார்.
அதே ஓவரின் ஐந்தாவது பந்தை அடித்து இரண்டு ரன் ஓடுவதற்கு ஜெய்ஸ்வால் முயற்சி செய்தார். மேலும் ருதுராஜை இரண்டாவது ரன்னுக்கு ஜெய்ஸ்வால் அழைத்தார்.
இப்படி ரன்னுக்கு ருதுராஜை அழைத்துவிட்டு பாதி தூரம் ஓடி நின்று திரும்ப வந்து விட்டார். இதன் காரணமாக ருத்ராஜ் நேற்று டைமண்ட் டக் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் டைமண்ட் டக் ஆகிய மூன்றாவது இந்திய வீரர் என்கிற மோசமான சாதனை பட்டியலிலும் இடம் பிடித்தார். 2016 ஆம் ஆண்டு பும்ரா இலங்கைக்கு எதிராகவும், 2017 ஆம் ஆண்டு அமித் மிஸ்ரா இங்கிலாந்துக்கு எதிராகவும் டைமண்ட் டக் ஆகியிருந்தார்கள்.
கிரிக்கெட்டில் டக், கோல்டன் டக், டைமண்ட் டக் என மூன்று வகையான டக் அவுட்டுகள் இருக்கின்றன. டக் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் ஆட்டம் இழப்பது. கோல்டன் டக் என்றால் சந்தித்த முதல் பந்திலேயே ரன் இல்லாமல் ஆட்டம் இழப்பது. டைமண்ட் டக் என்றால் பந்தை சந்திக்காமலே ஆட்டம் இழப்பது. நேற்று ருத்ராஜ் பந்தை சந்திக்காமலே டக் அவுட் ஆனார்.
மேலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் முதல் மூன்று இடங்களில் வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு மிக முக்கியமான தொடராகும். இசான் கிஷான், ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் மூவரும் அடுத்த ஆண்டு இந்திய டி20 அணியில் இருக்க வேண்டுமென்றால், இந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருக்க முடியும்.
இப்படி தங்களை நிரூபித்து ஆக வேண்டிய நெருக்கடிகள் இருக்கும் போட்டியில், ருதுராஜை ஜெய்ஸ்வால் பந்தயை சந்திக்க விடாமல் நேற்று ஆட்டம் இழக்க வைத்து விட்டார். மேலும் இந்திய அணிக்கு அடுத்து டி20 உலக கோப்பைக்கு முன்பாக 11 சர்வதேச டி20 போட்டிகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!