நாளை ஐபிஎல் 17வது சீசன் துவங்க இருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி அதிரடியாக அறிவித்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, இதேபோல் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் இருக்கும் பொழுது, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாக கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் டபுள் ரோல் செய்வதற்கு மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன் என்பதாக மகேந்திர சிங் தோனி ஒரு பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக இம்பேக்ட் பிளேயராக வருவாரா? அல்லது பேட்டிங் வரிசையில் முன்னே வருவாரா? இல்லை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா? என்பது போன்ற யூகங்கள் எழுந்து வந்தன.
மீண்டும் மகேந்திர சிங் தோனி சுயநலமற்ற முடிவு
மேலும் 2022 ஆம் ஆண்டு இதேபோன்று ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்தது.
தான் விளையாடுகின்ற நேரத்திலேயே புதிய கேப்டனுக்கு களத்தில் பயிற்சி அளிக்கும் விதமாக மகேந்திர சிங் தோனி இப்படியான முடிவை செய்திருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல எதிர்காலத்திற்காக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக கொண்டுவரப்பட்டது பயன் தரவில்லை. இயல்பாக களத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன்சி வரவில்லை.
இதன் காரணமாக அவரது பீல்டிங் வரையில் பாதிக்கப்பட்டது. அந்த ஐபிஎல் சீசன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஆண்டாக பதிவானது. அங்கிருந்து மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று, கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகிக் கொள்ள, புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டி20 அணியை வழிநடத்தி தங்கப்பதக்கம் வென்றார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணியும் வழிநடத்துகிறார்.
இதையும் படிங்க : ஜெர்சி டீம் பேர மாத்துனா.. ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சிடுமா? – பிரெட் லீ தந்த பதில்
மகேந்திர சிங் தோனி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 212 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து 128 போட்டிகளில் வெற்றியும் 82 போட்டிகளில் தோல்வியும் கண்டிருக்கிறார். மேலும் கேப்டனாக ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.