இந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி இருப்பவர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவர் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்தியிருக்கும் இடம் என்பது இன்னொருவர் அபகரிக்க முடியாத சிறப்பு வாய்ந்த இடம்.
ஒரு பேட்ஸ்மேனாக, அதே நேரத்தில் பினிஷராக, விக்கெட் கீப்பராக, கேப்டனாக என அவர் உண்டாக்கி இருக்கும் தரநிலைகள் என்பது மிகவும் உயர்வானது. இந்த அத்தனை சிறப்பம்சங்களையும் அவர் ஒருங்கே வைத்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அவர் என்ன செய்தாரோ அதை திருப்பி அப்படியே ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வந்தார். ஒரு அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் அவர் உருவாக்கி இருக்கும் சாதனையை இனி ஒரு கேப்டன் உடைப்பது என்பது மிகவும் கடினமானது.
அவர் ஐந்து கோப்பைகளை வென்றது மட்டும் இல்லாமல், அதிக முறை அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த இரண்டையும் சேர்த்து ஒரு கேப்டன் செய்வது என்பது முடியாத காரியமாக தான் பார்க்கப்படுகிறது.
மேலும் மகேந்திர சிங் தோனி ஐ பி எல் தொடரில் உண்டாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலாச்சாரம் என்பது எல்லா வீரர்களாலும் விரும்பப்படுவது. மேலும் சிறந்த வீரர்களை வாங்குவதோடு நிற்காமல், வாங்கும் வீரர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடிய திறமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருந்தது. அதில் ஒரு முக்கிய பங்கு மகேந்திர சிங் தோனிக்கு இருக்கிறது.
எனவே இதன் காரணமாக அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்கின்ற அணியை தாண்டி வெளியிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தொடர்ந்து விளையாடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவருக்கு இந்த ஆண்டுதான் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்றும் கூட நினைக்கிறார்கள்.
இதுகுறித்து இந்திய லெஜெண்ட் அனில் கும்ப்ளே கூறும் பொழுது “மகேந்திர சிங் தோனி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அவர் இதற்கு மேல் விளையாடுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் அவர் எப்பொழுது ஓய்வு பெற போகிறார் என்பது குறித்து உங்களுக்கு எந்த க்ளுவும் கொடுக்க மாட்டார்.
அவர் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு எப்படி யாருக்கும் எதுவும் சொல்லாமல் ஓய்வு பெற்றாரோ, அதேபோல் தான் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் இருந்து வெளியேறுவார் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அவர் அறுவை சிகிச்சை காயத்திற்கு பிறகு தயாராக இருந்தார் என்றால், அவர் முழு சீசனையும் விளையாடுவார்!” என்று கூறியிருக்கிறார்.