தோனி பவுலர்களை உருவாக்கி கோலி கிட்ட தந்துட்டு போனாரு.. 434 விக்கெட் எடுத்த இந்திய பவுலர் பரபரப்பு பேட்டி.!

0
3321

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி . இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பை மற்றும் ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று தந்த ஒரே கேப்டன் இவர்தான். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் .

இவர் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர். 2008 ஆம் ஆண்டு அணில் கும்பளே
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் முழு நேர டெஸ்ட் கேப்டனாக பதவியேற்ற தோனி 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார் . 60 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட தோனி 28 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியையும் பெற்றிருக்கிறார் . 2014 ஆம் ஆண்டு இவரது தலைமையில் ஆன இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இவரது டெஸ்ட் கேப்டன்ஷியில் மறக்க முடியாத ஒன்று .

- Advertisement -

இவருக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்ற விராட் கோலி 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் தென்னாப்பிரிக்கையை சுற்றுப்பயணத்தின் போது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் . 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி இருக்கும் விராட் கோலி அவற்றின் 40 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்திய கேப்டன்களிலேயே மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாக சரித்திரத்தில் இடம் பெற்று இருப்பவர் விராட் கோலி .

இவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று டெஸ்ட் தொடரை வென்றது. மேலும் இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்றதோடு தென்னாப்பிரிக்காவிலும் இந்திய அணி வெற்றி பெறாத செஞ்சூரியன் மைதானத்தில் முதல் முதலில் வெற்றி பெற்று சாதனையும் படைத்தது . விராட் கோலியின் டெஸ்ட் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது அவரது ஆக்ரோஷமான கேப்டன்சி மற்றும் பலம் வாய்ந்த இந்திய அணியின் வேகப்பந்து யூனிட் . இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை வளர்த்தெடுத்து விராட் கோலி இடம் கொடுத்தார் தோனி என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா தெரிவித்திருக்கிறார் .

இது தொடர்பாக jio சினிமாவிற்கு அவர் அளித்த பேட்டியில் ” விராட் கோலி சிறந்த டெஸ்ட் கேப்டன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . ஆனால் அவருக்கு ஒரு முழுமையான பந்துவீச்சு பேக்கேஜ் டோனியிடமிருந்து கிடைத்தது . அது இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது . தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார்கள் . அவர்கள் தோனியின் தலைமையில் நன்றாக வார்த்தெடுக்கப்பட்டு விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது ஒரு முழுமையான பந்துவீச்சாளர்களாக அவருக்கு கிடைத்தார்கள்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய இஷாந்த் சர்மா” விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . அவரது ஆக்ரோஷமான தலைமையின் கீழ் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் அவருக்கு முழுமையான பந்துவீச்சு கூட்டணி நன்றாக வளர்த்தெடுக்கப்பட்டு கிடைத்தது . அந்தப் பந்துவீச்சாளர்களை வளர்த்து அவருக்கு கொடுத்தவர் தோனி என்பதை மறந்து விடக்கூடாது . தோனி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பதவியேற்ற சில காலங்களில் இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளரான ஜாகிர் கான் ஓய்வு பெற்றார் . அணியில் நான் மட்டுமே அனுபவிக்க பந்துவீச்சாளராக இருந்தேன் . முகமது சமி உமேஷ் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இளம் வீரர்களாக அணியில் இருந்தனர். அவர்கள் சிறந்த பந்துவீச்சாளர்களாக தோனியின் தலைமையின் கீழ் வார்த்து எடுக்கப்பட்டனர். விராட் கோலி கேப்டனாக பதவியேற்ற போது அவர்கள் நன்கு முன்னேற்றமடைந்த பந்துவீச்சாளர்களாக உருவாகி இருந்தனர்” என்று தெரிவித்தார் .

மேலும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் வருகையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை வலுப்படுத்தியது . விராட் கோலி ஒவ்வொரு வீரரின் தனித்துவத்தை நன்றாக அறிந்திருந்தார் . மேலும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக திட்டங்களை வகுத்து அதற்கான பலன்களை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அவரது ஆக்ரோஷமான பண்பு எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தது. அதனை பயன்படுத்தி இந்திய அணியால் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது” என தெரிவித்திருக்கிறார்.