தோனி பதிரனாவ சும்மா நம்பல..இன்னைக்கு தெரிஞ்சது.. ஆனா இனிமேல்தான் இருக்கு – வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் பேச்சு!

0
1112
Dhoni

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இரு நாடுகளில் எப்படியான எதிர்பார்ப்பு இருக்குமோ, அதேபோன்ற எதிர்பார்ப்பு சமீபக் காலங்களில் இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இருநாட்டு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சில ஆண்டுகளாக இவர்களுக்குள் களத்தில் நடைபெற்ற சம்பவங்கள், இவர்கள் மோதிக் கொள்ளும் போட்டியை இப்படி மாற்றி இருக்கிறது!

இந்த நிலையில் 16வது ஆசியக் கோப்பையில் இன்று இவர்கள் மோதிக் கொண்டார்கள். போட்டியை மழை நடக்க விடுமா? என்கின்ற அளவுக்கு இருந்த நிலையில், பங்களாதேஷ் கேப்டன் டாஸ் வென்று தவறாக பேட்டிங் தேர்வு செய்ய, பங்களாதேஷ் அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இலங்கைத் தரப்பில் பந்துவீச்சில் இளம் வீரர் மதிஷா பதிரனா மிகச் சிறப்பாக பந்து வீசி 32 ரன்கள் மட்டும் தந்து 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, பங்களாதேஷ் அணியைக் குறைந்த ஸ்கோரில் சுருட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

பங்களாதேஷ் அணியை சுருட்டி எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி மிக வசதியான வெற்றியை 39 வது ஓவரில் பெற்றது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பும் இலங்கை அணிக்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டநாயகன் விருது மதிஷா பதிரனாவுக்கு வழங்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரராக வந்த பதிரனா கேப்டன் தோனியின் கவனத்தை ஈர்த்தார். அதற்குப் பிறகு அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறி இருக்கிறது. இதனால் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர வீரராகவே மாறுவதற்கான வாய்ப்புகள் வந்திருக்கிறது. தோனி இவர் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இவர் தனது முதல் சர்வதேச ஆட்டநாயகன் விருதை பெற்றதற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயான் பிஷப் தன்னுடைய ட்வீட்டில் “இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும், தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இவரை ஏன் நம்புகிறார்கள் என்று இன்றைக்குப் பார்த்தோம். இவர் தன்னுடைய கலையை இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் சீக்கிரத்தில் கற்றுக் கொள்வார். அப்பொழுது இவர் அணிக்கு மிகவும் உதவிகரமான வீரராக இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்.

ஆட்டநாயகன் விருது வென்ற பதிரனா பேசுகையில் “இது எனது நாட்டிற்கான எனது முதல் ஆட்டநாயகன் விருது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மெதுவான பந்துகள் வீசுவது மிகவும் முக்கியம். இதனால்தான் நான் கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் பெற்றேன். டி20 கிரிக்கெட்டில் இருந்து 50 ஓவர் கிரிக்கெட் வரை இது பயனுள்ள தேவையாக இருக்கிறது. எனது பந்துவீச்சு வித்தியாசமானது அதனால் கணிப்பதற்கு கொஞ்சம் கடினமானது!” என்று கூறி இருக்கிறார்!