ஆசியக்கோப்பையில் இரண்டாவது சுற்றில் தங்களின் கடைசி போட்டியில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன.
இந்திய அணி இரண்டாவது சுற்றில் இலங்கை அணியை வென்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. நேற்று இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வென்று இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
எனவே இன்று பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தங்கள் அணிகளில் இதுவரை வாய்ப்பு வழங்கப்படாத வீரர்களை பரிசோதிக்க இரண்டு அணிகளுக்குமே இது நல்ல வாய்ப்பு.
ஆனால் இன்று நடைபெறும் போட்டி கேப்டனாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது. அவர் இன்று பங்களாதேஷுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில், இரண்டு ஜாம்பவான்களின் சாதனையை நேர் செய்வார்.
இந்திய அணியின் மிக வெற்றிகரமான உலகக் கோப்பையை வென்ற கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இலங்கை அணியின் மிக வெற்றிகரமான உலகக் கோப்பையை வென்ற அர்ஜுன ரணதுங்கா இருவரும் ஆசியக் கோப்பையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில், கேப்டனாக மொத்தம் ஒன்பது வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கேப்டனாக ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா எட்டு வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். இன்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெல்லும் பொழுது இவர்களது சாதனை சமன் செய்யப்படும்.
மேலும் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றினால், ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிக போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். மேலும் இரண்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையையும் படைப்பார்.
ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடாத பொழுது இவர் கேப்டனாக பொறுப்பேற்று ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசிய கோப்பையை வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெல்வது, ஆசியக் கோப்பையை கைப்பற்றுவது, உலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணிக்கு நல்ல உத்வேகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது!