ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஐ.பி.எல் போட்டியில் அவருடன் இணைந்து விளையாடிய வீரர்களின் தற்போதைய நிலை

0
3624
Jasprit Bumrah Sachin and Rohit

இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா வலம்வர மிகப் பெரிய மேடை அமைத்துக் கொடுத்தது ஐபிஎல் தொடர் தான். இளம் வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர்களின் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவர்.இன்று அவர் இல்லாத எந்த ஒரு போட்டியையும் இந்திய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்.

அந்த அளவுக்கு பல மாயாஜாலங்களை தனது பந்து வீச்சின் மூலம் செய்து காட்டக் கூடிய திறமைசாலி. ஐபிஎல் தொடர் மூலம் இன்று நம்பர் ஒன் பவுலராக வலம் வந்து கொண்டிருக்கும் அவரது முதல் ஐபிஎல் போட்டியை அவ்வளவு எளிதில் காலத்தின் சுவடுகளில் இருந்து மறைத்துவிட முடியாது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் போட்டியில் 19 வயதான ஜஸ்பிரிட் பும்ரா விளையாடினார். இன்று காட்டுத் தீயாக எரிந்து கொண்டிருக்கும் அவரது பந்துவீச்சின் சிறு தீப்பொறி அன்று அவரது முதல் ஆட்டத்தின் மூலம் வந்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாடிய முதல் போட்டியில் அவருடன் இணைந்து விளையாடிய சக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் யார் யார் என்றும், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஓபனிங் வீரர்கள் : சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் (C)

அந்த போட்டியில் ஓபனிங் வீரர்களாக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினும், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் பாண்டிங்கும் விளையாடினார். இவர்கள் இருவரும் இணைந்து ஏதேனும் ஒரு போட்டியில் ஓப்பனிங் விளையாட மாட்டார்களா என்கிற கனவை நினைவாக்கிய வருடம் அது. அந்தப் போட்டியில் கேப்டனாக ரிக்கி பாண்டிங் முதலில் விளையாடினார். பின்னர் அந்தத் தொடரிலேயே சில போட்டிகளுக்கு பின், தனது கேப்டன் பதவியை ரோஹித்துக்கு அவர் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்று, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2014 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு, தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பாண்டிங் செயல்பட்டு வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வீரராக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் தற்போது ஆலோசகராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிடில் ஆர்டர் வீரர்கள் தினேஷ் கார்த்திக் (Wk), ரோஹித் சர்மா, அம்பத்தி ராயுடு

அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் தினேஷ் கார்த்திக் இரண்டு ஆண்டுகள் விளையாடினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மும்பைக்கு விளையாடிய அவர், அதன் பின்னர் பல அணிகளுக்கு இடம் மாறி 2018 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்

மேல் குறிப்பிட்டிருந்தது போல் அந்த தொடரின் ஒரு சில போட்டிகளுக்கு பின், ரிக்கி பாண்டிங்கிடமிருந்து கேப்டன் பதவியை ஏற்று மிக சிறப்பாக அணியை வழிநடத்தி, முதல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த வருடம் ரோஹித் ஷர்மா பெற்றுக் கொடுத்தார். அந்த வருடத்துடன் நின்றுவிடாமல் 2015,2017,2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ்க்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

அந்தப் தொடரில் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் அம்பத்தி ராயுடு விளையாட வில்லை என்றாலும், அதன் பின்னர் அணியில் இடம் பெற்று விளையாடினார். 2010 முதல் 2017ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடினார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தற்போது ராயுடு விளையாடி கொண்டிருக்கிறார்.

ஆல்ரவுண்டர் வீரர்கள் கீரன் பொல்லார்டு மற்றும் ஜேக்கப் ஓரம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆபத்பாந்தவனாக ஆரம்பம் முதல் இன்று வரை விளையாடி வரும் ஒரு ராஜ விசுவாசி யார் என்று கேட்டால், அது கீரன் பொல்லார்டு தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அந்த அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி கஷ்டப்படும் சூழ்நிலையில், தன் அதிரடி ஆட்டத்தின் மூலமாக நிறைய முறை அந்தணியை காப்பாற்றியிருக்கிறார்.

அந்த போட்டியில் மற்றொரு ஆல்ரவுண்டர் வீரர்ராக நியூசிலாந்து அணியை சேர்ந்த ஜேக்கப் ஓரம் விளையாடினார். ஆரம்பத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு விளையாடிய அவர் அந்த வருடம் மும்பை அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய பின்னர், வேறு எந்தவொரு ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

பந்து வீச்சாளர்கள் முனாஃப் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பஜன் சிங் மற்றும் மிட்சல் ஜான்சன்

அந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடிய முனாஃப் பட்டேல் மொத்தம் மூன்று ஆண்டுகள் ( 2011-2013) மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரில் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

பஜ்ஜி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் ஹர்பஜன்சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2008 முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் (2018&2019) சென்னை அணியில் விளையாடியவிட்டு, நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் அந்த வருடம் மற்றும் அதற்கு முந்தைய வருடம் (2012) மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். அதன் பின்னர் மீண்டும் 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த வருடம் இறுதிப் போட்டியில் குறிப்பாக இறுதி ஓவரில் அவர் பந்து வீசியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவர் தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரை கொல்கத்தா அணிக்காக 2018 ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

அந்தப் போட்டியில் புதிதாக களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் கைப்பற்றிய முதல் விக்கெட் விராட் கோலியின் விக்கெட் ஆகும். அந்தப் போட்டி தொடங்கி தற்பொழுது வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா ஒரு தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.