விராட் கோலி அறிமுகமான டி20ஐ போட்டியில் விளையாடியவர்களின் தற்போதைய நிலை இதுதான்

0
315
Virat Kohli and Suresh Raina

தற்பொழுது டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ரன் மெசின் விராட்கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். நவீன கிரிக்கெட்டில் நவீன கிரிக்கெட் ஷாட்ஸ்களான ரேம்ப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப், ஸ்விட்ச் ஹிட் என்று எந்த ஷாட்ஸ்களையும் ஆடாமலே, கிரிக்கெட்டின் வழக்கமான ஷாட்ஸ்கள் மூலமே, டி20 போட்டியில் தன் பேட்டிங்கின் மூலம் பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் விராட்கோலி!

2014, 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைகளில் விராட்கோலியின் பேட்டிங் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் முதன் முதலாக 2010ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகம் ஆனார். அவர் அறிமுகமான ஆட்டத்தில் விளையாடிய பல வீரர்கள் இன்று கிரிக்கெட்டில் இல்லை. அவர் அறிமுகப் போட்டியின் இந்திய அணியின் லெவனைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -
முரளி விஜய் – நமன் ஓஜா – துவக்க ஆட்டக்காரர்கள் :

2010 காலக்கட்டத்தில் முரளி விஜயின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. அவர் தனது ஐ.பி.எல்-ல் சென்னை அணிக்காகத் தொடர்ச்சியாக ரன்களை குவித்தார். இதனால் டி20 போட்டிகளில் மிக முக்கியமான வளரும் வீரராகப் பார்க்கப்பட்டார். தற்போது ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டாலும், எந்தவித கிரிக்கெட் தொடர்பிலும் இல்லாதது போல்தான் இருக்கிறார். நமன் ஓஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பராகவும், அதிரடி துவக்க ஆட்டக்காரராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்ததால், இவர் ஆடும் வாய்ப்பு பெற்றார். தற்போது இவர் கடைசியாக முன்னாள் வீரர்களின் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தார்.

சுரேஷ் ரெய்னா – ரோகித் சர்மா – விராட் கோலி – நடுவரிசை பேட்ஸ்மேன்கள் :

கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடததால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக அணியை வழிநடத்தினார். இந்திய அணியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ரெய்னாவின் மிகச்சிறப்பான அதிரடி பேட்டிங் அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்று தந்திருந்தது. தற்போது ஏறக்குறைய இவர் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். ரோகித் சர்மா பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராகக் களமிறங்கினார். அவர் துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்கப்படுவதிற்கு முன்பு வரை அவருக்கென்று இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நிலையான இடம் இருந்ததில்லை. தற்போது துவக்க ஆட்டக்காரராக முன்னேறியதோடு இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நம்பர் 3ல் நிரந்தரமாக விளையாடி, பல சாதனைகளைச் செய்துள்ள விராட்கோலி இந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணி வெற்றிபெறும் வரை களத்தில் இருந்தார்.

இர்பான் பதான் – ஆல்ரவுண்டர் :

பரோடா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இர்பான் பதான் இந்த ஆட்டத்தில் இரண்டு ஓவர்கள் பந்துவீசி 10 ரன்கள் தந்து, பேட்டிங்கில் நாட் அவுட்டாக 27 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தற்போது தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், சினிமாவிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -
ஆர். அஷ்வின் – அசோக் டின்டா – ஆர். வினய் குமார் – பிரக்யான் ஓஜா – பியூஷ் சாவ்லா – பந்துவீச்சாளர்கள் :

இந்த ஆட்டத்தில் ஆர்.அஷ்வின், பிரக்யான் ஓஜா, பியூஸ் சாவ்லா சுழற்பந்து கூட்டணியாய் செயல்பட்டார்கள். இதில் தற்போது ஆர்.அஷ்வின் இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல்-லிலும் விளையாடி வருகிறார். பிரக்யான் ஓஜா ஓய்வுபெற்று விட்டார். பியூஷ் சாவ்லா இந்த வருட ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகவில்லை. உள்நாட்டு கிரிக்கெட் லெஜன்டான வினய்குமார் மற்றும் அசோக் டின்டா இருவரும் இந்த ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சில் கூட்டணி அமைத்தனர். வினய் குமார் மும்பை இன்டியன்ஸ் அணியில் பணியாற்றுகிறார். அசோக் டின்டா தற்போது அரசியலில் ஈடுபட்டு, பெங்கால் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கிறார்!