தமிழக அணி சில நாட்களுக்கு முன்பு சையது முஷ்டாக் அலி டிராபி தொடரின் கடைசி போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இறுதிப் பந்தில் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார். சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடிய அதிரடி ஆட்டத்தை தற்போது விஜய் ஹசாரே தொடரிலும் பிரதிபலித்து வருகிறார்.
லீக் தொடரில் மும்பை மற்றும் பெங்கால் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய அவர் இன்று காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணிக்கு எதிராக தன்னுடைய ருத்ர தாண்டவத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு
தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையே நடந்த இன்றைய காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது. தமிழக அணியில் சிஎஸ்கே சிங்கங்கள் ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோர் பேட்டிங்கில் அசத்தினர்.ஓபனிங் பேட்ஸ்மேன் ஜெகதீசன் 101 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 102 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து பேட்டிங் விளையாடிய சாய் கிஷோர் 71 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 61 ரன்கள் குவித்து அசத்தினார். பந்து வீச்சிலும் அவர் ஒரு விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இறுதி கட்டத்தில் களமிறங்கிய ஷாருக்கான் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் என 79 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 22 பந்துகளில் அவர் 62 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் களமிறங்கிய கர்நாடக அணி 39வது ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தற்போது அரை இறுதி ஆட்டத்திற்கு தமிழக அணி தேர்வாகியுள்ளது.
புதிய பினிஷராக வலம் வரும் ஷாருக்கான்
ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாக தமிழக அணியில் 40 ஓவருக்கு மேலாகவே இவர் களம் இறங்குகிறார். சில ஓவர்கள் மட்டும் மீதம் இருக்கும் நிலையிலும் அவர் தன்னுடைய ஃபினிஷிங் வேலையை அதிரடியாக வே செய்து முடிக்கிறார். மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 35 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அதேபோல பெங்கால் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். ஷாருக்கான் இவ்வாறு இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடுவது தமிழக ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தியுள்ளது. கூடிய விரைவில் இந்திய அணியிலும் இதேபோன்று அதிரடி ஃபினிஷராக ஷாருக்கான் வலம் வரவேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.