நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று குஜராத் அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக தோனியின் காயம் மற்றும் அவர் விளையாடுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் பிளமிங் பேசியிருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தரம்சாலா மைதானத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ஆனால் குறிப்பிட்ட இந்த போட்டியில் சர்துல் தாக்கூர் முன்னே பேட்டிங் செய்ய வர, தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இது பெரிய சர்சைகளையும் சந்தேகங்களையும் கிளப்பிவிட்டது.
அவருடைய முழங்கால் காயம் அறுவை சிகிச்சையின் மூலம் சரியாகிவிட்டது என்றும், தற்பொழுது ஏற்பட்டு இருப்பது தசைக்கிழிவு எனவும், இந்த புதிய காயத்தின் காரணமாகவே தோனி விளையாட முன்கூட்டியே வருவதில்லை என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த காயத்தை கொண்டு ஓடினால் காயம் பெரிதாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் ஸ்டீபன் பிளம்மிங் கூறும்பொழுது “நாங்கள் அவருடைய பணிச்சுமையை நிர்வகித்து வருகிறோம். தசைக்காயத்துடன் அவர் அதிக போட்டிகள் பேட்டிங் செய்தால் அவரை நாங்கள் இழக்க வேண்டிய ஆபத்து வரும். எனவே அவர் கடைசியில் பவுண்டரி மற்றும் சித்தர்கள் அடித்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால், நாங்கள் அவரை வைத்து புதிய மாதிரி முயற்சி செய்கிறோம்.
கடந்த ஆண்டு அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து வந்து பலவீனமாக இருந்தபோதே, அவருக்கு அவரால் சமாளிக்கக்கூடிய குறிப்பிட்ட அளவு பணிச்சுமை இருக்கும் என்று கூறினோம். எங்களுக்கு பேக் அப் விக்கெட் கீப்பர் தேவை. ஆனால் அது தோனி கிடையாது. நாங்கள் தோனியை களத்தில் வைக்கவே விரும்புகிறோம். அவர் இரண்டு மூன்று ஓவர்கள் சிறப்பான முறையில் பேட்டிங் செய்வது, தந்திரோபாயங்கள் குறித்து கேப்டனுடன் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது போன்றவற்றுக்கு, களத்தில் அவர் தேவைப்படுகிறார்.
இதையும் படிங்க : பாபர் அசாம் அவங்க கூட 3 சிக்ஸ் அடிச்சா.. என் யூடியூப் சேனலை மூடுறேன் – முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சவால்
மேலும் இந்த காயம் என்பது புதிதாக ஏற்பட்டது கிடையாது. ஆனால் இது தற்போது செய்தியாகிவிட்டது. அவரால் நீண்ட நேரத்திற்கு பேட்டிங் செய்ய முடியாது. அதே சமயத்தில் விக்கெட் கீப்பிங் மிகவும் சிறப்பானவர். கண்கள் மற்றும் கை ஒருங்கிணைப்பில் செயல்படக்கூடியவர். எனவே இதையெல்லாம் யோசித்து நாங்கள் அவருக்கு ஒரு புதிய ரோல் வைத்து பயன்படுத்தி வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.