சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறுகின்ற போட்டியின் மூலமாக ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்க இருக்கின்ற காரணத்தினால், சொந்த மைதானத்தில் தங்கள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பார்க்கின்ற பெரிய ஆர்வத்திலும் உற்சாகத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இருந்தார்கள்.
ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் டாஸ் நிகழ்வுக்கு பத்து நிமிடங்கள் இருக்கும் பொழுது, ஜெர்சியை தோளில் போட்டபடி மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குள் வரும் பொழுது, ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். கேப்டனாக அவர் அப்படி வருவதை பார்க்க பலரும் நாளை காத்திருந்தார்கள்.
ஆனால் ரசிகர்கள் இனி அப்படியான நிகழ்வை பார்க்கவே முடியாதபடி மகேந்திர சிங் தோனி செய்துவிட்டார். வழக்கம்போல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதோடு, புதிய கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜை கொண்டு வந்திருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாக ருதுராஜ் வரவேண்டும் என்று பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பியது உண்மைதான். பல ரசிகர்களுடைய தேர்வாக அவரே இருந்தார். அவருடைய அமைதியான நிதானமான போக்கு அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அது மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு நடக்க வேண்டும் என அனைவரும் விரும்பினார்கள்.
ரகசியமாக வைக்கப்பட்ட முடிவு
மேலும் இந்த ஐபிஎல் சீசன் தோனிக்கு கடைசியாக இருக்கும் பட்சத்தில், அவரை கடைசி வரை கேப்டனாகவே பார்க்க வேண்டும் என்பது சிஎஸ்கே அணி தீவிர ரசிகர்களின் மன எண்ணமாக இருந்தது. ஆனால் அணியின் எதிர்காலமே முக்கியம் என்று தோனி மிகத் தைரியமாக இப்படியான முடிவை எடுத்திருக்கிறார்.
கடைசியாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அவர்களிடம் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து கேட்டு இருந்த பொழுது, அதற்கு அவர் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் இது குறித்தான முடிவை முழுக்க முழுக்க தோனி மற்றும் பயிற்சியாளர் இடம் விட்டு விட வேண்டும் என்றும், அதுகுறித்து யாரும் எதுவும் பேசக்கூடாது என்றும் கூறிவிட்டார் என்று தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில்தான் தோனி அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : உண்மைய ஒன்னும் செய்ய முடியாது.. பெரிய வாய்ப்பு தம்பி – ருதுராஜுக்கு சூரியகுமார் வாழ்த்து
இதுகுறித்து சிஎஸ்கே காசி விஸ்வநாதன் அவர்கள் கூறும் பொழுது “கேப்டன்களின் சந்திப்புக்கு முன்புதான் இந்த முடிவை நான் அறிந்தேன். தோனி அவர்களின் முடிவை நாம் மதிக்க வேண்டும். இது அவருடைய அழைப்பு. தோனி என்ன செய்தாலும் அதை சிஎஸ்கே அணியின் நலனுக்காகத்தான் இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.