இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தரம்சாலா மைதானத்தில் மோதிய போட்டியில், சிஎஸ்கே அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சில தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் தோற்பது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் டாஸ் அவர் தோற்க சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் 21 பந்தில் 32 ரன்கள் எடுக்க, ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 139 ரன்கள் மட்டுமே ஒன்பது விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட் கைப்பற்றினார். இன்று வாய்ப்பு பெற்ற சிமர்ஜித் சிங் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் “நீங்கள் டாஸ் இழந்த பிறகு போட்டியை வென்று விட்டால், டாஸ் இழந்தது நல்லது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு டாஸ் என்பது எப்பொழுதும் மிகவும் முக்கியமான ஒன்று. விக்கெட் மெதுவாக இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். மேலும் ஆடுகளத்தில் குறைந்த பவுன்சும் இருந்தது. நாங்கள் தொடக்கத்தில் விளையாடி விதத்தில் 200 ரன்கள் எட்டி இருக்கலாம். பின்பு விக்கெட்டுகளை இழந்ததால் 160, 170 என மாறியது.
ஆனால் இரண்டாவது பகுதி போட்டியில் நாங்கள் செயல்பட்ட விதத்தில் போட்டி சமநிலைக்கு வந்தது. சிமர்ஜித் சிங் வேகமாக பந்து வீச என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் எங்களுடைய பயிற்சி முகாமில் 150கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார். எங்களிடம் நிறைய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எதுவும் தாமதமாகி விடவில்லை இன்று அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க : 20 ரன் கம்மியா எடுத்துட்டோம்னு நினைச்சோம்.. ஆனா எங்க வெற்றிக்கு காரணம் இதுதான் – ஜடேஜா பேட்டி
நாங்கள் இன்று ஒரு இம்பாக்ட் பிளேயராக ஒரு பேட்ஸ்மேனை அனுப்பலாம் என்று நினைப்போம். அவர் பத்து முதல் பதினைந்து ரன்கள் எடுப்பார். ஆனால் ஒரு பந்துவீச்சாளர் வந்தால் இரண்டு மூன்று விக்கெட்டுகள் எடுக்க முடியும். சில தோல்விகளுக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி நிம்மதியை தருகிறது. காலையில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது கூட தெரியவில்லை. எனவே இந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.