சிஎஸ்கே அணியில் ஆலோசகராக இருக்க தோனிக்கு அனுமதி மறுப்பு – பிசிசிஐ அதிரடி முடிவு!

0
100

தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் உள்ள சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராக தோனி செல்ல முடியாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஐபிஎல், பிக்பாஸ் லீக், பாகிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் என அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் உள்ளூர் டி20 லீக் தொடர்களை நடத்தி வருகிறது. அதேபோன்று தற்போது தென் ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் உள்ளூர் டி20 லீக் தொடரை நடத்த உள்ளது. இதில் பங்கேற்க உள்ள அணிகளில் ஆறு அணிகளை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். உதாரணமாக, ராஜஸ்தான், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ போன்ற முன்னணி அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

- Advertisement -

உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் உட்பட எந்த ஒரு இந்திய வீரரும் வெளிநாட்டில் உள்ள லீக் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று பிசிசிஐ உத்தரவு ஏற்கனவே இருக்கிறது. அதையும் மீறி அவர்கள் பங்கேற்றால் பிசிசிஐ உடன் எந்தவித ஒப்பந்தமும் செய்ய முடியாது. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தமும் உடனடியாக துண்டிக்கப்படும். இதனால் தென்னாபிரிக்கா லீகில் இந்திய வீரர்கள் பங்கேற்க மாட்டர் என அனைவரும் அறிவோம்.

தென் ஆப்பிரிக்கா லீகில் பங்கேற்க உள்ள சிஎஸ்கே அணிக்கு இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி ஆலோசகராக இருப்பதற்கு பிசிசிஐ இடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், தோனி பங்கேற்பதற்கு அனுமதி இல்லை. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐபிஎல் போட்டிகளில் இன்னும் விளையாடி வருகிறார். இதனால் அவரால் தென்னாப்பிரிக்கா லீகில் பங்கேற்கும் சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராக முடியாது என தெளிவு படுத்தினார்.

இந்த விவகாரம் ஒன்றும் இந்திய வீரர்களுக்கு புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்பு கரீபியன் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்கள் சிலர் பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது பிசிசிஐ எச்சரிக்கையுடன் இவர்களது கோரிக்கையை மறுத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக், கரீபியன் தீவுகளுக்கு சென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும் போட்டியை அந்த அணியின் வீரர்களுடன் கண்டுகளித்தார். இதற்கு பிசிசிஐ மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் இடம் உத்தரவிட்டது.

- Advertisement -

சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் இந்திய வீரர்கள் வெளிநாட்டினர் லீக் போட்டிகளில் பங்கேற்காதது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பதில் அளிக்கையில், “இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்றால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். இதனால் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடும்பொழுது போதிய உடல் ₹தகுதி இல்லாமலும் போகலாம். வீரர்களின் உடல் தகுதியை உரிய வகையில் பாதுகாக்கும் விதமாக இந்திய தேசிய அகடமி ஒன்றை நிறுவி பிசிசிஐ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வீரரும் முக்கியம் என்பதால் இத்தகைய முடிவை எடுத்ததோடு மட்டுமல்லாமல் அதில் பிடிவாதமாகவும் பிசிசிஐ இருக்கிறது. இதை வெளிநாட்டு வீரர்கள் பலர் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.