சிறப்பாக பீல்டிங் செய்து ஆட்டநாயகன் விருது வென்ற 5 கிரிக்கெட் வீரர்கள்

0
2908
Jonty Rhodes and David Miller

ஒரு போட்டியின் வெற்றிக்கு உதவிய வீரருக்கு வழங்குவதே ‘ ஆட்ட நாயகன் ‘ விருது. பெரும்பாலும், அந்த விருதை சிறப்பாக பேட்டிங் அல்லது பவுலிங் செய்த வீரருக்கே வழங்குவர். ஆனால், தற்பொழுது பீல்டிங் செய்து அணிக்கு பங்களிக்கும் வீரர்களுக்கும் ஆட்டநாயகன் விருது அளிக்கப்படுகிறது. எதிரணி பேட்ஸ்மேன்கள் சேர்க்கும் ஒவ்வொரு ரன்னையும் ஃபீல்டர்கள் தடுக்கிறார்கள். அது பவுலிங் செய்யும் அணிக்கு கூடுதல் புத்துணர்ச்சியை தருகிறது.

ஐ.பி.எல் போன்ற தொடர்களில் சிறந்த கேட்ச்சை பிடிக்கும் வீரருக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அப்படி இல்லை. ஒரு வீரரின் பீல்டிங் வெற்றிக்கு உதவினால் மட்டுமே அந்த விருது வழங்கப்படுகிறது. அவ்வாறு, சிறப்பாக பீல்டிங் செய்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்ற வீரர்களைப் பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

1. டேவிட் மில்லர், 2019 :

2019ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் டேவிட் மில்லர் தனது அற்புதமான பீல்டிங்கால் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். முதலில் பேட் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது. 193 எனும் இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 85/2 என்ற வலுவான நிலையில் இருந்தது. சிறப்பாக ஆடி வந்த பாபர் அசாமின் விக்கெட்டை தனது துல்லியமான த்ரோவில் ரன் அவுட் செய்தார் டேவிட் மில்லர்.

சோயப் மாலிக், அசிப் அலி, ஹாசன் அலி, இமத் வாசிம் போன்ற நட்சத்திர வீரர்களின் கேட்ச்களை பிடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரிஸ்வானையும் ரன் அவுட் செய்து தென்னாபிரிக்கா அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். சிறப்பான பீல்டிங்கால் பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறித்த மில்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

2. விவியன் ரிச்சர்ட்ஸ், 1989 – 90 :

Viv Richards Fielding

மும்பையில் நடைபெற்ற உலக சீரிஸின் 2வது அரை இறுதிப் போட்டியில் இந்திய – மேற்கிந்திய தீவுகள் மோதின. இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாச்தில் மேற்கிந்திய அணி வீழ்தியது. விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. 48.5 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விவியன் ரிச்சர்ட்ஸ் தவிர அனைத்து கரீபியன் வீரர்களும் பவுலிங்கில் விக்கெட் எடுத்தார்கள். பந்துவீச்சில் ரிச்சர்ட்ஸ் சிறப்பிக்க வில்லை என்றாலும், பீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டார். 3 கேட்சுகளை பிடித்ததோடு பல பவுண்டரிகளையும் தடுத்தார்.

3. ஜான்டி ரோட்ஸ், 1993 – 94 :

ஜான்டி ரோட்ஸ் உலகின் தலைசிறந்த ஃபீல்டர். 1992 உலக கோப்பையில் தனது சிறப்பான பீல்டிங்கால் ஆதிக்கம் செலுத்தினார். மும்பை மைதானத்தில் தென்னாபிரிக்கா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே ஹீரோ கப்பின் 4வது போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 40 ஓவரில் 180 ரன்கள் அடித்தது. ஜான்டி ரோட்ஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் விளாசினார். அடுத்துக் களமிறங்கிய மேற்கிந்திய அணியால் இலக்கை அடைய இயலவில்லை. இப்போட்டியில் ஜான்டி ரோட்ஸ் மொத்தம் 5 கேட்சுகளை பிடித்தார். அவர் விளாசிய 40 ரன்களை விட இந்த ஐந்து கேட்சுகளே தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதைக் கருத்தில் கொண்டு ஜான்டி ரோட்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஒரே போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற சாதனையையும் ஜான்டி ரோட்ஸ் நிகழ்த்தினார்.

4. மார்க் டெய்லர், 1992 – 93 :

Mark Taylor

1992/93 உலக சீரிஸின் மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 30 ஓவரில் 101/9 ரன்கள் அடித்தது. மிகக் குறைந்த இலக்கை நிர்னையிதிருந்தாலும், அன்று ஆஸ்திரேலிய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மார்க் டெய்லர் பேட்டிங்கில் வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் பீல்டிங்கில் டெய்லர் அமர்களப் படுத்தினார். ஸ்லிப்பில் பீல்டிங் செய்த அவர் நான்கு முக்கிய கேட்ச்களை பிடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஸ்லிப்பில் பீல்டிங் செய்வது மிகக் கடினம். அதற்குத் தனி திறமை வேண்டும். இப்போட்டியில் மார்க் டெய்லர் நான்கு கேட்ச்களை மட்டுமல்ல ஆட்டநாயகன் விருதையும் பிடித்துவிட்டார்.

5. கஸ் லோகி, 1986 :

1986 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவர்களது வெற்றிக்கு பேட்ஸ்மேன்களோ பந்துவீச்சாளர்களோ காரணம் அல்ல. ‘ பறக்கும் கரீபியன் ‘ என்று அழைக்கப்படும் கஸ் லோகி அன்றைய ஆட்டத்தின் நாயகனாக திகழ்ந்தார்.

பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அவர்களது 2 தொடக்க வீரர்களின் கேட்ச்களையும் கஸ் லோகி பிடித்தார். பின்னர், இஜாஸ் அகமது ரன் எடுக்க முயற்சிக்கும் போது, ஸ்கொயர் லெக்கில் நின்று கொண்டிருந்த கஸ் லோகி ‘ டேரக்ட் ஹிட் ‘ அடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார். போட்டியின் முடிவில், அவர் 3 கேட்சுகள் மற்றும் 2 ரன் அவுட்கள் செய்திருந்தார். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக பீல்டிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வென்றவர் இவரே.