1998 காமன்வெல்த் கிரிக்கெட் தொடரில் நடந்த 5 சுவாரசியமான நிகழ்வுகள்

0
1550
Southafrica and India

உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டி அதிக மக்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னுமும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவில்லை. சமீபத்தில் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் இந்திய அணி 7 பதக்கங்களை வென்றது. இது மிகப் பெரிய சாதனை. கிரிக்கெட்டை, ஒலிம்பிக்கில் சேர்த்தால் கூடுதலாக ஓர் பதக்கம் கிடைக்கும் என்று தைரியமாக கூறலாம். ஏனென்றால், தற்போது உள்ள இந்திய அணி மிகவும் வலுவான ஒன்றாக கருதப்படுகிறது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசியும் விருப்பம் தெரிவித்துள்ளது. 2028ம் ஆண்டு நிச்சயம் இடம்பெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஒலிம்பிக்கை போல காமன்வெல்த் போட்டி என ஒன்று இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக கிரிக்கெட்டும் நடத்தப்பட்டது. இது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது. 1998ம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. அத்தொடரில் நடந்த 5 சுவாரசியமான நிகழ்வுகளைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

1. தங்கப்பதக்கம் வென்றது தென்னாபிரிக்கா

பொதுவாக, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவி வெளியேறுவது தென்னாபிரிக்காவின் வழக்கம். இருப்பினும், 1998ம் நடந்த காமன்வெல்த் தொடரில் அவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ‘ சி ‘ பிரிவில் பார்படோஸ், அயர்லாந்து, பங்களாதேஷ் நாடுகளுடன் தென்னாபிரிக்காவும் இடம்பெற்றது.

வேகப்பந்து வீச்சாளர் ஷான் பொல்லாக் தென்னாபிரிக்காவின் கேப்டனாக செயல்பட்டார். ‘ சி ‘ பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளையும் வீழ்த்தி பட்டியலில் முதல் இடம் பிடித்தது. விறுவிறுப்பான அரை இறுதிப் போட்டியில் இலங்கையை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து தென்னாபிரிக்கா தங்கப் பதக்கம் வென்றது.

2. வெஸ்ட் இண்டீஸ் மூன்று அணிகளாப் பிரிக்கப்பட்டது

பொதுவாக, காமன்வெல்த் தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் தங்களுக்கென்று ஒரே ஒரு அணியை உருவாக்கி போட்டிகளில் கலந்துக் கொள்வர். ஆனால் 1998 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று அணிகளை வைத்து ஆடியது.

- Advertisement -

ஏனென்றால், மேற்கிந்திய தீவுகள் பல நாடுகளின் ஒன்றியம். பார்படோஸ், ஜமைக்கா, ஆன்டிகுவா & பார்புடா என மூன்று அணிகள் ஆடின. சோகம் என்னவென்றால், எந்த ஒரு அணியாலும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

3. முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்திய அணி

அஜய் ஜடேஜா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்து குரூப் போட்டியுடன் வெளியேறியது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆன்டிகுவா & பார்புடா, கனடா ஆகிய அணிகள் ‘ பி ‘ பிரிவில் இடம்பெற்றன. மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

கனடா மூன்று போட்டிகளும் தோல்வியை தழுவி ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தில் தங்கியது. ஆன்டிகுவா & பார்புடா மற்றும் இந்தியா தலா மூன்று புள்ளிகள் பெற்றது. நெட் ரன்ரேட் விதியினால் ஆன்டிகுவா & பார்புடா அணிக்கு கீழே, மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றது. எனினும், இவ்விரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பொறவில்லை.

4. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே.பிரசாத்

ஒரு சில வருடங்கள், இந்திய அணியின் தேர்வாளரக எம்.எஸ்.கே.பிரசாத் பணிபுரிந்தார். இவர் பெரிதாக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. இருப்பினும், 1998 காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக எம்.எஸ்.கே.பிரசாத் ஆடினார். அஜய் ஜடேஜா தலைமையின்கீழ் ஆடிய இந்திய அணியில் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், ராபின் சிங், ஹர்பஜன் சிங், ரோஹன் கவாஸ்கர் மற்றும் சில வீரர்கள் ஆடினர்.

5. அரை இறுதியில் 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நியூஸிலாந்து

ஆஸ்திரேலிய அணியைப் போல நியூசிலாந்தும் ‘ டி ’ பிரிவில் ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், கென்யா அணிகளை வீழ்த்தி ஆறு புள்ளிகள் பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நியூசிலாந்து அணி 58 ரன்களுக்கு ஆல் அவுட் அதிர்ச்சி அளித்தது.

59 என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியா அணி துரத்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் தோற்ற நியூசிலாந்து அணி, முதல் அரை இறுதியில் தோற்ற இலங்கை அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.