நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ஏற்கனவே சென்னை அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆன மைக் ஹசி சென்னை அணியின் தற்போதைய நிலை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கடைசி இடத்தில் சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி அதில் 2 போட்டிகள் மட்டும் வெற்றி மற்றும் 8 போட்டிகளில் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதோடு பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியும் விட்டது. இன்னும் சிஎஸ்கே அணிக்கு நான்கு போட்டிகள் இருப்பதால் அந்த நான்கும் வெற்றி பெற்று தொடரை ஓரளவு மிடில் வரிசையில் முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
இந்த தொடரில் குறிப்பாக சிஎஸ்கே தக்க வைத்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திர சிங் தோனியை தவிர அதிக கோடிகளுக்கு தக்கவைக்கப்பட்ட சிவம் தூபே, ஜடேஜா மற்றும் பத்திரானா ஆகியோர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டுக்கான அணியை கட்டமைக்க இப்போது ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாகவும், செய்த தவறை நினைத்து பீதி அடையாமல் மாற்றங்களை செய்ய தயாராக இருக்கிறோம் என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சில மாற்றங்களை செய்ய வேண்டும்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த வருடம் எங்களுக்கு சரியாக அமையவில்லை என்பதற்காக நாங்கள் பீதி அடைந்து நிச்சயமாக அனைவரையும் தூக்கி எறியப் போவதில்லை. ஆனால் நாங்கள் ஒரு சில பகுதிகளில் நன்றாக கட்டமைக்க வேண்டும். நாங்கள் அட்டவணையில் கடைசியில் இருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெறவில்லை. ஆனால் உண்மையில் நாங்கள் இதற்கு வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.
இதையும் படிங்க:இதை நான் தெளிவா புரிஞ்சுட்டுதான்.. டி20யில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன்.. விராட் கோலி கூறும் காரணம்
ஏனென்றால் சில போட்டிகளை வெற்றி பெற்று தரக்கூடிய வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். எனவே எந்த அணிக்கு எதிராகவும் எங்களால் நிச்சயமாக போட்டியிட முடியும். ஐபிஎல்லில் விளையாட சில இளம் வீரர்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவர்கள் நன்றாக செயல்பட்டு தங்கள் இடத்தை உயர்த்த முடியும் என்று நம்புகிறோம். சில வீரர்கள் தங்களது வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றால் அது தொடரின் முடிவில் எங்களுக்கு அற்புதமானதாக இருக்கும்” என பேசி இருக்கிறார்.






