சாக்கு சொல்ல விரும்பல.. நாங்க பஞ்சாப் கிட்ட தோத்தது இதனாலதான் – ரிஷப் பண்ட் வருத்தமான பேச்சு

0
154
Pant

17வது ஐபிஎல் சீசனில் இன்றைய இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வார்னர், மார்ஸ், ரிஷப் பண்ட் என எந்த நட்சத்திர வீரர்களும் சரியான ரன் பங்களிப்பு செய்யவில்லை. இறுதியில் பெங்கால் மாநில அணிக்காக விளையாடும் 21 வயதான இளம் வீரர் அபிஷேக் போரல் 10 ரன்களில் அதிரடியாக 32 ரன்கள் எடுக்க, டெல்லி அணி தட்டுத்தடுமாறி 174 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யும்பொழுது, அடுத்து பந்து வீச வேண்டும் என்பதால் இம்பேக்ட் பிளேயராக பவுலர் முகேஷ் குமாரை வைத்திருந்தது. ஆனால் 17 ஓவர்களில் முக்கிய ஏழு விக்கெட்களை இழந்துவிட்ட காரணத்தினால், முகேஷ் குமார் இடத்தில் அபிஷேக் போரலை களம் இறக்கியது. இதனால் அவர்களுக்கு கடைசி கட்டத்தில் பந்து வீசுவதற்கு ஒரு பந்துவீச்சாளர் இல்லாத நிலைமை ஏற்பட்டது.

தோல்விக்கு காரணம் இதுதான்

இந்த நிலையில் அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது, இந்திய அணியின் அனுபவ வீரர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஷிகர் தவான் விக்கெட்டை கைப்பற்றினார்.அவர் இரண்டு ஓவர்கள் வீசி முடித்திருக்கும் நிலையில், பீல்டிங் செய்யும் பொழுது காலில் காயமடைந்து வெளியேறினார். ஏற்கனவே ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்த நிலையில் இது டெல்லி அணியை கடுமையாக பாதித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாம் கரன் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து 47 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இறுதிவரை களத்தில் இருந்த லிவிங்ஸ்டன் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் காரணமாக நீண்ட நாட்கள் கழித்து விளையாட வந்த ரிஷப் பண்டுக்கு கேப்டனாக முதல் போட்டி ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

போட்டியின் முடிவுக்குப் பின் பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் “இஷாந்த் சர்மா காயம் எங்களுக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி விட்டது. ஏற்கனவே அபிஷேக் போரல் களம் இறங்கியதால், எங்களுக்கு ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்தது. ஆனாலும் அபிஷேக் போரல் எங்களுக்கு தேவையான ரன்களை அந்த இடத்தில் கொடுத்தார். ஆனால் நாங்கள் ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்து விட்டோம். போட்டியின் பல்வேறு இடங்களில் எங்கள் வீரர்கள், ஆட்டத்திற்குள் அணியை கொண்டு வர கடுமையாக போராடினார்கள்.

இதையும் படிங்க : 454 நாட்கள் திரும்பிய ரிஷப் பண்ட்.. சாம் கரன் அதிரடியில் டெல்லி கேப்பிடல்சை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது

நான் திரும்பி வரும் பொழுது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இப்படியான பதட்டம் புதிது கிடையாது. நான் சாக்கு சொல்ல விரும்பவில்லை, ஒரு பந்துவீச்சாளரை குறைவாக வைத்திருந்தால் எப்பொழுதுமே ஆட்டத்தை வெல்ல முடியாது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய விதத்திற்கு அவர்களுக்கான பெருமையை சேர்க்க வேண்டும்.அபிஷேக் போரல் பேட்டிங் நன்றாக இருந்தது. இந்த ஐபிஎல் சீசன் நகரும் பொழுது, அவரிடம் இருந்து நாங்கள் இன்னும் சிறப்பானது எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.