இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் பேசி இருக்கிறார்.
இந்திய அணி கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்த பிறகு இதுவரையில் உள்நாட்டில் மட்டும் மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. இது வேறெந்த பயிற்சியாளர்கள் கீழும் இவ்வளவு மோசமான முறையில் இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வி அடைந்ததில்லை.
இந்திய பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள். அவர்கள் விளையாடி பெரிய ரன்கள் எடுப்பதற்கு தகுந்தவாறு ஆடுகளங்கள் இந்தியாவில் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அமைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக அவர்கள் போட்டியிலேயே இருப்பதில்லை.
ஒட்டுமொத்தமாக எந்த அணியின் ஸ்பின்னர்கள் வேகமாக விக்கெட் கைப்பற்றுகிறார்களோ அந்த அணி ஜெயக்கும்படியாகவே அமைந்தது. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒரு கட்டத்தில் திறமையை மறந்து அதிர்ஷ்டத்தை நம்பும் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது இது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து பிராட் ஹேடின் கூறும் பொழுது ” விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவர்கள் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு தகுந்தவாறு ஆடுகளங்கள் அமைத்து, ஸ்கோர் போர்டில் பெரிய ரன்கள் கொண்டு வந்து எதிரணியின் மேல் அழுத்தத்தை போட்டார்கள். ஆனால் இப்போது உள்ளவர்கள் அதிர்ஷ்டத்தை நம்பி ஆடுகளங்களை சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கிறார்கள்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பே 2 அணிகள் பிளேயிங் லெவனை தேர்வு செய்துவிட்டது.. ஆதாரத்துடன் கூறிய இர்பான் பதான்
“இப்படி செய்கின்ற காரணத்தினால் சாதாரணமான ஸ்பின்னர்கள் கூட பெரிய தாக்கத்தை உண்டு செய்யக்கூடியவர்களாக மாறுகிறார்கள். சுமாராக பந்தை தூக்கி வீசினால் மற்றதை ஆடுகளம் பார்த்துக் கொள்கிறது. கம்பீர் வெளியில் வந்து தங்கள் விளையாடும் ஆடுகளம் குறித்து மகிழ்ச்சி என சொன்னதாக கேள்விப்பட்டேன். ஆனால் இதே காரணத்தினால் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியடைந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.