இதுதான் என்னோட இயல்பு.. நான் எதிர்பார்த்தது ரெண்டே பந்துக்கு மட்டும்தான் – புவனேஸ்வர் குமார் பேட்டி

0
519
Bhubaneswar

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை வெற்றி பெற வைத்த புவனேஸ்வர் குமார் வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் 44 பந்துக்கு 58 ரன், நிதிஷ் ரெட்டி 42 பந்துக்கு 76* ரன், கிளாசன் 19 பந்துக்கு 42* ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் மட்டும் இழந்து 201 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கியே விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள், ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்கள். ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். களத்தில் ரோமன் பவல் மற்றும் அஸ்வின் இருந்தார்கள்.

இந்த நிலையில் அஸ்வினுக்கு முதல் பந்தில் ஒரு ரன் தந்த புவனேஸ்வர் குமார், ரோமன் பவலுக்கு நான்கு பந்துக்கு 10 ரன் கொடுத்தார். இதனால் கடைசிப் பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அந்தப் பந்தை மிகச் சிறப்பாக லோ ஃபுல் டாஸ் ஆக வீசி, ரோமன் பவலை எல்பிடபிள்யு செய்து, ஹைதராபாத் அணிக்கு திரில் வெற்றியைக் பெற்றுக் கொடுத்தார்.

இந்த போட்டிக்கு பின் ஆட்டநாயகன் விருது வென்ற புவனேஸ்வர் குமார் பேசும்பொழுது “என்னுடைய இயல்பே இப்படி செயல்படுவதுதான் என்று நினைக்கிறேன். கடைசி ஓவரில் முடிவை பற்றி நான் சிந்திக்கவே கிடையாது. கடைசி ஓவரில் எப்படி பந்து வீசுவது என்ற விவாதமும் கிடையாது. செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. இரண்டு நல்ல பந்துகளை வீசுவதை மட்டும்தான் நான் நினைத்தேன். எதுவும் நடக்கலாம் என்பதால் அதிகம் யோசிக்கவில்லை. செயல்பாட்டில் கவனம் செலுத்தினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 1பந்து 2 ரன்.. புவி மேஜிக் பவுலிங்.. ராஜஸ்தானை ஹைதராபாத் வென்றது.. சிஎஸ்கே கீழே இறங்கியது

ஆரம்பத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. உண்மையில் போட்டியில் தனிப்பட்ட முறையில் எதையும் சுட்டிக் காட்ட முடியவில்லை. நான் ஒட்டுமொத்தமாக ரசித்து விளையாடினேன். அதிர்ஷ்டவசமாக இன்று விக்கெட் கிடைத்தது. ஐபிஎல் சீசன் தொடங்கும் பொழுது என்னுடைய செயல்முறை சிந்தனை வேறு மாதிரி இருந்தது. ஆனால் ஐபிஎல் சென்ற விதத்தில் என்னுடைய செயல்முறை உண்மையில் மாறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.