“ஜாக் கிரவுலி அவுட்டில் டெக்னாலஜி தப்பா இருக்கு” – பென் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு

0
433
Stokes

கடந்த இரண்டு ஆண்டுகளில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டை மூன்று துறைகளிலும் அதிரடியான முறையில் அணுகி வருகிறது.

அவர்களது இந்த அணுகுமுறை மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு வெற்றியும் கொடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த வருடத்தில் பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்று இங்கிலாந்து அசத்தி இருந்தது. ஆசியாவில் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.

- Advertisement -

ஆனால் இந்திய ஆடுகளங்கள் சற்று சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்தியாவில் இங்கிலாந்தின் அதிரடியான அணுகுமுறை எடுபடாது என்று பலரும் கூறி வந்தார்கள்.

இப்படியான நிலையில் இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வந்ததோடு, அதற்கு முன்பாக அபுதாபியில் 9 நாட்கள் சிறப்பு பயிற்சி எடுத்து, பின்பு முதல் டெஸ்ட் போட்டியை யாரும் எதிர்பார்க்காத வகையில் வென்று ஆச்சரியப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும் இந்த இலக்கை அவர்கள் எட்டினாலும் எட்டி விடுவார்கள் என்கின்ற அச்சம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் இந்திய அணி நிர்வாகத்திடமும் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் நான்கு விக்கெட்டுகளை 154 ரன்களுக்கு இங்கிலாந்து இழந்தது. அதில் ஒரு விக்கெட் ரேகான் அகமது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் அணியின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தார்கள்.

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த துவக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி உடன் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 194 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை கொண்டு வந்தது.

இந்த நேரத்தில்தான் குல்தீப் யாதவை கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சுக்கு கொண்டுவர, அவரது பந்துவீச்சை சந்தித்த ஜாக் கிரவுலி காலில் பந்தை வாங்கினார். இந்திய அணி எல்பிடபிள்யுக்கு முறையிட அம்பயர் தரவில்லை.

இதற்குப் பிறகு பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ரோஹித் சர்மாவிடம் பேசி சம்மதிக்க வைத்து ரிவ்யூ எடுக்க வைத்தார். ஆனால் ரோகித் சர்மாவுக்கு ரிவ்யூ செல்ல விருப்பம் இல்லாமல் தான் சென்றார். மேலும் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்களுக்கும் அது அவுட் என நம்பிக்கை பெரிதாக இல்லை.

இந்த நிலையில்தான் ரிவியூ பார்த்த பொழுது பந்து ஸ்டெம்ப்பை அதிகம் தாக்குவதும் அவுட் என்பதும் தெரியவந்தது. இது இந்திய அணிக்கே ஆச்சரியமாக தான் இருந்தது. இதற்குப் பிறகு அதே ரன்னோடு பேர்ஸ்டோவும் ஆட்டம் இழந்தார். அத்தோடு இங்கிலாந்து அணியின் வெற்றிக்கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

இதையும் படிங்க : “எனக்கு ரெண்டே ஐடியா தான்.. அவர் செய்யறத மட்டும் பார்க்க ஆச்சரியமா இருக்கு” – ஜெய்ஸ்வால் பேட்டி

ஜாக் கிரவுலி அவுட்டுக்கு டிஆர்எஸ் முறை செயல்பட்டது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறும்போது ” ஜாக் கிரவுலி அவுட்டில் டி ஆர் எஸ் டெக்னாலஜி தவறான முறையில் செயல்பட்டு இருக்கிறது” என்று குற்றம் சாட்டி இருக்கிறார். தற்போது இது சமூக வலைதளத்தில் பரபரப்பாகி வருகிறது.