இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது வீரர்களிடையே பல விஷயங்களில் கண்டிப்புடன் நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு தேர்வு குழு என்ன மாதிரியான கண்டிப்பை காட்டியது என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி நிறைய போட்டிகளில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் முன்னணி வீரர்கள் யாரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தார்கள். இதன் காரணமாக இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சில் விளையாடும் திறன் குறைந்தது.
மேலும் இந்திய தேசிய அணிக்காக விளையாடி காயமடைந்த வீரர்கள் மீண்டும் எந்தவித பயிற்சி போட்டியில் இல்லாமல் நேரடியாக இந்திய அணிக்குள் வந்து கொண்டு இருந்தார்கள். தற்பொழுது இந்த விஷயங்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முட்டுக்கட்டையை போட்டு இருக்கிறது.
அதே சமயத்தில் இந்திய உள்நாட்டு தொடர்களில் விளையாட மறுக்கும் இந்திய வீரர்களுக்கு சரியான தண்டனையையும் கொடுத்து வருகிறது. கடந்த ரஞ்சி சீசனில் தங்கள் சொந்த மாநில அணிக்கு விளையாடாத இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சம்பள பட்டியலில் இருந்து நீக்கி அதிரடி காட்டியது.
இந்த நிலையில் காயமடைந்திருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு நடந்தது என்ன? என்பது பற்றி ஜெய் ஷா கூறும் பொழுது “நாங்கள் கண்டிப்புடன் நடந்து கொள்கிறோம். ரவீந்திர ஜடேஜா காயமடைந்த பொழுது நான்தான் அவரை அழைத்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடச் சொன்னேன். இந்திய அணிக்காக விளையாடி காயமடைந்து வெளியே சென்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி உடல் தகுதியை நிரூபித்த பிறகே இந்திய அணிக்குள் வர முடியும் என்பது இப்பொழுது உறுதியாகி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ரோகித் விராட் விஷயத்தில் ஜெய் ஷா செய்தது சரியில்ல.. அவங்க திரும்ப பக்காவா வர முடியாது – கவாஸ்கர் விமர்சனம்
மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரையும் துலீப் டிராபி விளையாட வைக்காததற்கு முக்கிய காரணம் அவர்கள் காயமடைந்து இந்திய அணிக்கு வரவில்லை என்றும், மேலும் விளையாடினால் காயமடையும் ஆபத்து இருப்பதாகவும், அத்தோடு ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் முன்னணி நட்சத்திரங்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வைப்பதில்லை எனவும், எனவே தாங்களும் தங்கள் முன்னணி வீரர்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியம் என்று கூறியிருந்தார்.